நூன்மரபு

3.எண்

பன்னீருயிர்

8.ஒளகார இறுவாய்ப்
பன்னீ ரெழுத்தும் உயிரென மொழிப.

இஃது, மேற்கூறிய குறிலையும் நெடிலையும் தொகுத்து வேறு ஓர் குறியிடுதல் நுதலிற்று.1

ஒளகார இறுவாய்ப் பன்னீர் எழுத்தும் - ஒளகாரமாகிய இறுதியையுடைய பன்னிரண்டு எழுத்தினையும், உயிர் என மொழிப- உயிரென்னும் குறியினையுடைய என்று சொல்லுவர்.

(8)

1."ஆட்சியும் காரணமும் நோக்கியதோர் குறி மெய் பதினெட்டினையும் இயக்கித் தான் அருவாய் வடிவின்றி நிற்றலின் உயிராயிற்று. இவை மெய்க்கு உயிராய் நின்று மெய்களை இயக்குமேல் உயிரென வேறோர் எழுத்தின்றாம் பிறவெனின், மெய்யினிற்கும் உயிரும் தனியே நிற்கும் உயிரும் வேறென உணர்க. என்னை? `அகர முதல' (குறள் 1) என்புழி அகரந் தனியுயிருமாய்க் ககரவொற்று முதலியவற்றிற்கு உயிருமாய் வேறுநிற்றலின். அவ்வகரம் தனியே நிற்றலானும் பல மெய்க்கண் நின்று அவ்வம் மெய்கட்கு இசைத்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுகட்டதாகலின் ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதோர் தன்மையுடைத்தென்று கோடும் ; இறைவன் ஒன்றேயாய் நிற்கும் தன்மையையும் பல்லுயிர்க்கும் தானேயாய் அவற்றின் அளவாய் நிற்கும் தன்மையும் போல, அது அ என்ற வழியும் ஊர என விளியற்ற வழியும் `அகர முதல' என்ற வழியும் மூவினங்களில் ஏறின வழியும் ஓசை வேறுபட்டவாற்றான் உணர்க" (நச்சி)