இதுவும் ஒரோவழி மொழிவரையறை. புகர் அறக் கிளந்த அஃறிணை மேன - குற்றம் அறச் சொல்லப்பட்ட அஃறிணையிடத்து, மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த - மகரவீற்றுத் தொடர்மொழியோடு மயங்காதென்று வரையறுக்கப்பட்ட, னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப - னகரவீற்றுத் தொடர்மொழி ஒன்பதென்று சொல்லுவர். எ - டு: நிலம், நிலன், பிலம், பிலன் என்றாற்போல்வன மயங்குவன. இனி மயங்காதன உகின், செகின், விழன், பயின், அழன், புழன், குயின், கடான், வயான் என வரும். இவற்றுள் திரிபுடையன களைக. ஒன்பஃது என்னும் ஆய்தம் செய்யுள் விகாரம். அஃறிணையென்றது ஈண்டு அஃறிணைப் பெயரினை. இரண்டாவது மொழிமரபு முற்றிற்று.
|