3. பிறப்பியல்

எழுத்துக்களின் பிறப்பிலக்கணம் உணர்த்துவது

இவ் வோத்து என்ன பெயர்த்தோவெனின், எழுத்துக்களது பிறப்பு உணர்த்தினமையின் பிறப்பியல் என்னும் பெயர்த்து.இதனை நூன்மரபின் பின்னே வைக்கவெனின் சார்பிற்றோற்றத் தெழுத்தும் தனிமெய்யும் மொழிமரபிடை உணர்த்திப் பிறப்பு உணர்த்த வேண்டுதலின், மொழிமரபின் பின்னதாயிற்று.

1. எழுத்துக்கள் பொதுவாகப் பிறக்குமாறு

83.உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும்1 உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புற் றமைய நெறிப்பட நாடி
எல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப்
பிறப்பின் ஆக்கம் வேறுவே றியல.
திறப்படத் தெரியுங் காட்சி யான.

இத் தலைச்சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், எழுத்துக்களது பொதுப் பிறப்பு உணர்த்துதல் நுதலிற்று.

எல்லா எழுத்தும் நெறிப்பட நாடி சொல்லும் காலை-தமிழெழுத்துக்க ளெல்லாம் ஒருவன் முறைப்பட ஆராய்ந்து தம்மைச் சொல்லுங்காலத்து, உந்தி முதலா முந்துவளி தோன்றி-கொப்பூழ் அடியாக மேலே கிளர்கின்ற உதானன்2 என்னும் பெயரையுடைய வாயுத் தோன்றி, தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ - தலையின்கண்ணும் மிடற்றின்கண்ணும் நெஞ்சின்கண்ணும் நிலைபெற்று. பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் உறுப்பு உற்று அமைய - (தலையும் மிடறும் நெஞ்சும் என்னும் மூன்றனோடும்) பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எட்டாகிய முறைமையையுடைய இடங்களில் ஓர் உறுப்போடு ஓர் உறுப்புத்தம்மிற் பொருந்தி அமைதி பெற, பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல-பிறப்பினது ஆக்கம் வேறு வேறு புலப்பட்டு வழங்குதலுடைய, திறப்படத் தெரியும் காட்சியான - கூறுபாடுள்ளதாக ஆராயும் அறிவிடத்து.

இதழ்போறலான் வாய் இதழெனப்பட்டது. எல்லா எழுத்தும் என்னும் எழுவாய்க்குப் ` பிறப்பினாக்கம் வேறுவேறு இயல ' என்பதனை ஒரு சொன்னீர்மைப்படுத்திப் பயனிலை யாக்குக.


1. எழுத்தைப் பிறப்பித்தற்கு இடமும் உறுப்பும் என இரண்டு வேண்டும். எழுத்தின் இனத் தன்மையைத் தோற்றும் நெஞ்சு தொண்டை முதலியவை இடம்; தனித்தனி எழுத்தைத் தோற்றும் நா பல் முதலியவை உறுப்பு. மூக்கைத் தொல்காப்பியர் உறுப்பென்றார்; நன்னூலார் இடமென்றார். இருவரும் தலையை ஓர் இடமாகக் கொண்டனர். இஃது உடல் நூலுக்கும் ஒலி நூலுக்கும் பொருந்துவதாய்த் தோன்றவில்லை. (பாவாணர்)

2. உதானன் - ஒலிக்காற்று.