2. உயிரெழுத்துக்கள் பிறக்குமாறு

உயிர்க்கும் மெய்க்கும் ஒரு பொதுவிதி

88.தத்தந் திரிபே சிறிய வென்ப.

இஃது, முன் கூறிய உயிர்க்கும் மேற்கூறும் மெய்க்கும் ஓர் புறனடை கூறுதல் நுதலிற்று.

தம்தம் திரிபு சிறிய என்ப - (எழுத்துக்கள் ஒரு தானத்துக் கூடிப் பிறக்கு மெனப்பட்டன; அவ்வாறு கூடிப்பிறப்பினும்) தத்தம் வேறுபாடுகளைச் சிறிய வேறுபாடுகளென்று சொல்லுவர்.

அவ் வேறுபாடு அறிந்துகொள்க.1

(6)

1.அவை எடுத்தல், படுத்தல், நலிதல், விலங்கல் என்றவாற்றானும் தலைவளி2 நெஞ்சுவளி, மிடற்றுவளி, மூக்குவளி என்றவாற்றானும் பிறவாற்றானும் வேறுபடுமாறு நுண்ணுணர்வுடையோர் கூறி உணர்க. ஐ விலங்கலுடையது3 வல்லினம் தலைவளி யுடையது. 4மெல்லினம் மூக்குவளி யுடையது. இடையினம் மிடற்றுவளி யுடையது, ஏனையவுங் கூறிக் கண்டு உணர்க. (நச்)

2. தலைவளி எழுத்திற்குப் பயன்படுவதாய்த் தெரியவில்லை.

3. விலங்கல் - நலிதலை அடுத்த படுத்தல் ஒலிகளைச் சேர்த்துக் கூறும் போது உள்ள ஒசை.

4. வல்லினம் நெஞ்சுவளி யுடையதென்பதே பொருத்தமானது. (பாவாணர்.)