1.கிளவியாக்கம்

2.பால்

இந்த ஈறுகள் வினையிலும் வருதல்

10இருதினை மருங்கின் ஐம்பால் அறிய
ஈற்றில்நின் றிசைக்கும் பதினோ ரெழுத்தும்
தோற்றந் தாமே வினையொடு வருமே.
 

உயர்திணை அஃறிணை யென்னும் இரண்டு திணைக் கண்ணும் உளவாகிய ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என்னும் ஐந்து பாலும் அறிய அவ்வச் சொல்லின் இறுதிக்கண் நின்று ஒலிக்கும் பதினோரெழுத்தும் புலப்படுதற்கண் வினைச்சொற்கு உறுப்பாய்ப் புலப்படும்; எ- று.

திணை இரண்டே பால் ஐந்தே என வரையறுத்தற்கு `இருதிணை மருங்கின் ஐம்பால்' என்றார்.

னகாரமும் ளகாரமும் ரகாரமும் மாரும் இறுதிநின்றுணர்த்தும் என்பதற்கு `ஈற்றின் நின்றிசைக்கும் பதினோரெழுத்தும்' என்பது ஞாபக1மாயிற்று. அல்லனவற்றிற்கு அநுவாத2மாத்திரம் என்றார்.

தாமே என்பது கட்டுரைச் சுவைபட3 நின்றது. வினை எனப் பொதுப்படக் கூறினாராயினும் ஏற்புழிக் கோடல் என்பதனாற் படர்க்கை வினை என்று கொள்ளப்படும்.

இவை பெயரொடு வழிவழித் திரிபின்றிப் பால் விளக்காமையின் வினையொடு வரும் என்றார்.

(10)

1. ஞாபகம் - நினைவுறுத்தல்; `னஃகா னொற்றே ஆடூஉவறிசொல்' என்பது முதலிய நூற்பாக்களில் ஈற்றில் நின்றிசைக்கு மென்று சொல்லாத ஈறுகள் இங்கு ஈற்றில் நின்றிசைக்கு மென்று கூறியது ஞாபகம்.

2. அநுவாதம் - வழிமொழிதல்.முன் கூறியதையே பின்னும் கூறுதல் ஒரு பயனோக்கியதாயின் வழி மொழிதல் என்னும் குணமும் பயனற்றதாயின் கூறியது கூறல் என்னுங் குற்றமுமாகும், இங்கு வழி மொழிதல்.

3. கட்டுரைச்சுவை - இலக்கிய உரைநடைச்சுவை.