மேல் மயக்கங் கூறப்பட்ட வேற்றுமையேயன்றி, அவை போல்வன பிறவும், தொன்று தொட்டு வரும் வழக்கிற் பிழையாது, உருபானும் பொருளானும் ஒன்றன் நிலைக் களத்து ஒன்று சென்று, பிறிதொன்றன் பொருளுந் தன் பொருளுமாகிய ஈரிடத்தும் நிலைபெறும் வேற்றுமையெல்லாந் திரிபுடைய வல்ல தெரிந்துணர்வோர்க்கு; எ-று. பொதுவகையான இருவயினிலையு மென்றாரேனும், வழி போயினா ரெல்லாங் கூறை கோட்பட்டார் என்றவழிக் கூறை கோட்படுதல் கடவுளரை யொழித்து ஏனையோர்க்கே யாயினவாறு போல ஏதுப் பொருட்கண் வரும் மூன்றாவதும் ஐந்தாவதும் ஒரு பொருளேபற்றி நிற்றலின் இருவயினிலையற் கேலாமையான், அவற்றை யொழித்து அஃதேனையவற்றிற் கேயாம். என்னை? ஏனைய தன் பொருளிற் றீராது பிறி தொன்றன் பொருட்கட் சேறலுடைமையான் இருவயினிலையற்கேற்றவா றறிக. அன்ன பிறவாவன-நோயினீங்கினான் நோயை நீங்கினான் எனவும், சாத்தானை வெகுண்டான் சாத்தனொடு வெகுண்டான் எனவும், முறையாற் குத்துங்குத்து முறையிற் குத்துங்குத்து எனவும், கடலோடு காடொட்டாது கடலைக் காடொட்டாது வருவனவும் பிறவுமாம். இக்காலத்துச் சிதைந்து வழங்கும் மயக்கமு முண்மையால் தொன்னெறி பிழையாதன ஆராய்ந் துணரப்படுமென்பார் `தெரியுமோர்க்கு' என்றார். (18) |