பலவுருபுந் தம்முட்டொடர்ந் தடுக்கி வந்த வேற்றுமைச் சொற்களெல்லாம் முடிக்குஞ் சொல்லொன்றனான் முற்றுப் பெற்று நடக்கும். அவ்வொன்றனாற் பொருள் செல்லுமிடத்து : எ-று. ஈண்டு வேற்றுமைக் கிளவியென்றது வேற்றுமை யுருபையிறுதியாகவுடைய சொல்லை. எ - டு:`என்னொடு நின்னொடுஞ் சூழாது' எனவும் , `அந்தணர் நூற்கும் அறத்திற்கு மாதியாய் நின்றது மன்னவன் கோல்' (குறள் - 543) எனவும் வரும். சாத்தன்றாயைக் காதலன், நாய் தேவனாயிற்று என்புழி; தாயை தேவன் என்பன, காதலன் ஆயிற்றென்னும் பயனிலைக்கு அடையா இடைநின்றாற் போல, கோட்டைநுனிகட் குறைத்தான், தினையிற் கிளியைக் கடியும் என்புழி; நுனிக்கண் கிளியை யென்பன, குறைத்தான் கடியுமென்னும் முடிக்குஞ் சொல்லிற்கு அடையாய் இடைநின்ற வாகலான், அவையடுக் கன்மையின், அவை யுதாரணமாதல் உரையாசிரியர் கருத்தன் றென்க. குழையைச் சாத்தனது கள்ளரின் என இவ்வாறு தொடராது வரு வனவற்றை நீக்குதற்கு உருபு தொடர்ந்தடுக்கியவென்று, நீ தந்த சோற்றையுங் கூறையையுமுண்டுடுத் திருந்தேம் என இன்னோரன்னுழி ஒரு சொல்லாற் பொருள் செல்லாமையின் அவற்றை நீக்குவதற்குப் பொருள் சென்மருங்கென்றுங் கூறினார். பிறவுமன்ன. (19) |