3.வேற்றுமை மயங்கியல்

அவ் வுருபுகளின் இயல்புகள்

உருபு விரிந்து நிற்குமிடம்

103இறுதியும் இடையும் எல்லா வுருபும்
நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையார்1.
 

வேற்றுமைத்தொடரிறுதிக்கண்ணும் அதனிடை நிலத்தும் ஆறுருபுந் தத்தமக்கோதிய பொருட்கண் நிற்றலை வரையார் ; எ-று.

எ - டு:கடந்தான் நிலத்தை, வந்தான் சாத்தனொடு, கொடுத்தான் சாத்தற்கு, வலியன் சாத்தனின் இருந்தான் குன்றத்துக்கண் எனவும் ; நிலத்தைக் கடந்தான், சாத்தனொடு வந்தான் , சாத்தற்குக் கொடுத்தான், சாத்தனின் வலியன் சாத்தனதாடை குன்றத்ததுக்கணிருந்தான் எனவும் வரும்

நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையா ரெனவே, அப் பொருளுணர்ந்தாக்கால் நிலவுதல் வரையப்படு மென்பதாம் . அங்ஙனம் வரையப்படுவன யாவையெனின் : - ஆறாவதும் ஏழாவதும், சாத்தனதாடை, குன்றத்துக்கட்கூகை என இடை நின்று தம்பொருளுணர்த்தினாற் போல, ஆடை சாத்தனது கூகை குன்றத்துக்கண் என இறுதி நின்ற வழி அப்பொருளுணர்த்தாமையான் அவ்வுருபுகள் ஆண்டு வரையப்படும். ஆறனுருபேற்ற பெயர் உருபொடு கூடிப் பெயராயும் வினைக் குறிப்பாயும் நிற்றலுடைமையான் . அந்நிலைமைக் கண் ஆடைசாத்தனது என இறுதிக்கண்ணும் நிற்குமென்பது. இவ்வுரையறை யுணர்த்துதற்கும் `மெய்யுருபு தொகா அ இறுதியான' (சொல் - 105) என முன்னருணர்த்தப்படும் வரையறைக்கு இடம்படுதற்கும் "ஈறு பெயர்க்காகும்" (சொல் - 99) என்றோதப்பட்ட உருபு தம்மையே இறுதியுமிடையும் நிற்குமென வகுத்துக் கூறினாரென்பது.

(20)

1. இச்சூத்திரத்திற்கும் மேல்வரும் `பிறிது பிறிதேற்றலும்' என்னுஞ் சூத்திரத்திற்குஞ் சேனாவரையர் முதலாயினார் உரைத்த உரையை மறுத்துச் சிவஞான முனிவர் வேறுரை வுரைத்தார். தொல்காப்பியச் சூத்திர விருத்தியுட் காண்க.