3.வேற்றுமை மயங்கியல்

அவ் வுருபுகளின் இயல்புகள்

உருபு மற்றொன்றேற்றலும் தொக்கு வருதலும்

104பிறிதுபிறி தேற்றலும் உருபுதொக வருதலும்
நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப.
 

பிறிதோருருபு பிறிதோருருபை யேற்றலும் ஆறுருபுந் தொக்கு நிற்றலும், நெறிபட வழங்கிய வழக்கைச் சார்ந்து வருதலான், வழுவாகா ; எ-று.

ஏற்புழிக் கோட லென்பதனால் பிறிதோருருபேற்பது ஆறாவதேயாம்1.

பிறிதேற்றலு மென்றமையால் , தானல்லாப் பிறவுருபேற்றல் கொள்க.

எ - டு:சாத்தனதனை, சாத்தனதனொடு, சாத்தனதற்கு, சாத்தனதனின், சாத்தனதன்கண் என உருபு உருபேற்றவாறும் ; நிலங்கடந்தான், தாய்மூவர், கருப்பு, வேலி , வரைவீழருவி , சாத்தன்கை, குன்றக் கூகை எனவும் :

கடந்தானிலம், இருந்தான் குன்றத்து எனவும் உருபு தொக்கு நின்றவாறுங் கfண்டு கொள்க.

இறுதியு மிடையு மென்பதனை அதிகாரத்தான் வருவித்து இரண்டிடத்துங் கூட்டி யுரைக்க.

சாத்தனதனது எனச் சிறுபான்மை தன்னையுமேற்றல் உரையிற் கோடலென்பதனாற் கொள்க.

பெயரிறுதி நின்ற உருபு தன் பொருளொடு தொடராது பிறிதோ ருருபை யேற்றலும், தான் நின்று தம்பொருளுணர்த்தற்பாலன தொக்கு நிற்றலும், இலக்கணமன்மையின். வழுவமைத்தவாறு.

(21)

1. சாத்தனது என்னும் அஃறிணைப் படர்க்கை யொன்றன்பாற் குறிப்பு வினை முற்று வினையாலணையும் பெயராகி, சாத்தனதை, சாத்தனதனை, சாத்தனதோடு சாத்தனதனொடு எனப் பிறவுருபேற்கும் . பிற வேற்றுமை யுருபுகள் இங்ஙனம் வினை முற்றீறும் பெயரீ றுமாகாமையின் பிறவுருபேலவென அறிக.