3.வேற்றுமை மயங்கியல்

105ஐயுங் கண்ணும் அல்லாப் பொருள்வயின்
மெய்யுருபு தொகாஅ இறுதி யான.
 

ஐகார வேற்றுமைப் பொருளுங் கண்ணென வேற்றுமைப் பொருளுமல்லாத பிற பொருளின்மேனின்ற உருபு தொடர்மொழியிறுதிக்கண் தொக்கு நில்லா; எ-று.

இறுதியுமிடையுமென்பது அதிகரிக்க உருபு தொக வருதலுமென்றாமையான் வரைவின்றி எல்லாவுருபும் இறுதிக்கண்ணுந் தொகுமென்பது பட்டதனை விலக்கி, இவ்விரு பொருட்கண்ணும் வருவனவே இறுதிக்கட்டொகுவன அல்லன தொகாவென வரையறுத்தவாறு.

அறங்கறக்கும் என இடைக்கண் தொக்கு நின்ற நான்காவது கறக்கு மறம்என இறுதிக்கண் தொக்கு நில்லாமை கண்டு கொள்க. பிறவுமன்ன.

(22)