3.வேற்றுமை மயங்கியல்

அவ் வுருபுகளின் இயல்புகள்

உருபுகளின் திரிபு

108குஐ ஆனென வரூஉ மிறுதி
அவ்வொடு சிவணுஞ் செய்யு ளுள்ளே.1.
 

கு ஐ ஆனென வரூஉ மூன்றுருபும், தொடரிறுதிக் கண்ணின்றவழி, அகரத்தோடு பொருந்திநிற்றலுமுடைய செய்யுளுள் ; எ - று.

எ - டு:`கடிநிலை யின்றே யாசிரி யற்க' (தொல். புள்.49) எனவும், காவ லோனக் களிறஞ் கம்மே. `களிறு மஞ்சுமக்காவ லோன' எனவும் `புரைதீர் கேள்விப் புலவ ரான' எனவும் `உள்ளம் போல வுற்றுழி யுதவும், புள்ளியிற் கலிமா வுடைமையான' எனவும் வரும்.

குகரமும் ஐகாரமும் ஈறு கெட அகரத்தொடு சிவணலுடைமையான் , ஐ ஆன் கு என முறையில் கூறாது. கு ஐ என அவற்றை இயையவைத்தார். இயைய வைக்கின்றவர் ஐகாரம் முன்வைக்கவெனின்;- முறை அதுவாயினுஞ் செய்யுளின்பம் நோக்கிக் குகரம் முன்வைத்தாரென்பது.

அஃதேல் , இத் திரிபு `தம்மீறு திரிதல்' (சொல்-251) என இடைச்சொற்கோதிய பொதுவிலக்கணத்தாற் பெறப்படுதலின் ஈண்டுக் கூறல் வேண்டாவெனின்;- அப் பொது விலக்கணத்தான் எய்துவன உருபிற்குமெய்துமேல். `பிறிது பிறி தேற்றலும் , பிறிதவணிலைய' (சொல்-251) லாயடங்குதலான் ஈண்டுக் கூறல் வேண்டாவாம்; அதனான் அன்ன பொதுவிலக்கணம் உருபிற்கெய்தாதென மறுக்க.

(25)

1. நூற்பாவிற் கூறப்பட்ட மூன்றுருபுகளும் அகரத்தொடு பொருந்தும், `ஐ' கெடும்; ஏனைய `கு' `ஆன்' இரண்டும்கெடா.