ஒரு திணைச்சொல் ஏனைத் திணைச்சொல்லொடு முடியுந் திணைவழுவும், ஒருபாற்சொல் அத்திணைக்கண் ஏனைப் பாற்சொல்லொடு முடியும் பால்வழுவும், பிறிதோர் காரணம் பற்றாது ஒரு பொருட்குரிய வழக்கு ஒரு பொருண்மேற் சென்ற தெனப்படும் மரபு வழுவும், வினாயதற் கிறையாகச் செப்பு வழுவும், வினாவப்படாத பொருளைப்பற்றி வரும் வினா வழுவும், ஓர் இடச்சொல் ஓர் இடத்துச்சொல்லோடு முடியும் இட வழுவும், காலக்கிளவி தன்னோடியையாக் காலமொடு புணரும் கால வழுவும் என வழு எழுவகைப்படும். "வழுவற்க என்றலும்" "வழுவமைத்தலும்" என வழுக்காத்தல் இருவகைப்படும். குறித்த பொருளை அதற்குறிய சொல்லாற் சொல்லுக என்றல் வழுவற்க என்றலாம். குறித்த பொருட்குரிய சொல்லொன்றாயினும் ஒருவாற்றான் அப்பொருள் விளக்குதலின் அமைக என்றல் வழுவமைத்தலாம். இச்சூத்திர முதலாக இவ் வோத்து வழுக் காக்கின்றது. கூறப்பட்ட பதினோரீற்றவாய் வினைபற்றி வரும் பால்அறி சொல்லும், அவன் இவன் உவன் என்பன முதலாகப் பெயர்பற்றி வரும் பால்அறி சொல்லும், தம்முள் தொடருங் கால், ஒரு பாற்சொல் ஏனைப் பாற்சொல்லொடு மயங்கா, தம் பாற் சொல்லொடு தொடரும். எனவே பிற பாற்சொல்லொடு தொடர்வன வழு என்பதாம்; எ-று. ஈண்டுப் பெயரென்றது பொருளை1, திணையுணராக்கால் அதன் உட்பகுதியாகிய பால் உணர்தலாகாமையின், பால் அறி கிளவி எனவே திணையறிதலும் பெறப்படும் ; படவே மயங்கல்கூடா என்றது திணையும் பாலும் மயங்கற்க என்ற வாறாம். இன்னும் மயங்கல்கூடா என்றதனால், வினைப் பாலறிசொல்லும் பெயர்ப் பாலறி சொல்லும் , பாலறி சொல்லுள் ஒரு சாரனவும்2 இடமுங் காலமும் உணர்த்துமாகலின், அவ்வாறு உணர்த்துவனவற்றானும் மயங்கற்க என்ற வாறாம்; ஆகவே , இடமும் காலமும் மயங்காது வருதலும் கூறப்பட்டதாம். எ - டு: அவன் வந்தான், அவள் வந்தாள், அவர் வந்தார், அது வந்தது, அவை வந்தன எனவும் ; நெருநல் வந்தான் எனவும் திணையும் பாலும் இடமும் காலமும் வழுவாது முடிந்தவாறு. அவ்வாறன்றி , அவன் வந்தது, அவன் வந்தாள், யான் வந்தான், நாளை வந்தான் என மயங்கி வருவன வெல்லாம் வழுவாம். `சிறப்புடைப் பொருளைத் தான் இனிது கிளத்தல்' என் பதனான் ஐம்பால் உணர்த்துதற் சிறப்புடைய படர்க்கை வினைபற்றி ஓதினாரேனும், `தன்மைச் சொல்லே அஃறிணைக் கிளவி' (சொல் - 43) என்றும், `முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி' (சொல் - 462) என்றும் பெயர் வழுவமைப்பாராகலின் தன்மை முன்னிலைப் பாலறி கிளவியும் மயங்கற்க என்பது ஈண்டைக் கொள்ளப்படும். எ - டு: யான் வந்தேன், யாம் வந்தேம் எனவும் ; நீ வந்தாய் , நீயிர் வந்தீர் எனவும் வரும். யான் வந்தேம் , நீயிர் வந்தாய் என்னுந் தொடக்கத்தன வழுவாம். மயங்கல் கூடா என்றது மயங்குதலைப் பொருந்தா என்றவாறு, மயங்கல்கூடா தம்மரபினவே என்பனவற்றுள் ஒன்றனது ஆற்றலான் ஏனையதன் பொருளும் உணரப்படுதலின் ஒன்றே அமையுமெனின் சொல் இல்வழியது உய்த்துணர்வதென்க. தம் மரபினவே என்பதனைப் பிரித்து வேறோர் தொடராக்கிச் சொற்கண் மரபு பிறழா தம் மரபினவே என மரபுவழுக் காத்ததாக உரைக்க. இது யோகவிபாகம் 3 என்னும் நூற்புணர்ப்பு. முன் இரு பொருள்பட உரைப்பனவெல்லாம் இந் நூற்புணர்ப்பாகக் கொள்க. யானை மேய்ப்பானைப் பாகன் என்றலும் யாடு மேய்ப்பானை இடையன் என்றலும் மரபு. மேய்த்தல் ஒப்புமையான் யானை மேய்ப்பானை இடையன் என்றலும், யாடு மேய்ப்பானைப் பாகன் என்றலும் மரபுவழு. செப்புவழா நிலையும், வினாவழா நிலையும் சிறப்பு வகையான் ஓதப்படும் இடவழாநிலையும், இவ்வாறு ஓதப்படும் மரபுவழாநிலையும் ஒழித்து, ஒழிந்தன இச் சூத்திரத்தாற் காத்தார். (11)
1. பெயரென்றது பொருளை - நூற்பாவில் பெயர் என்றது பெயரால் குறிக்கப்படும் பொருளை. பெயர் என்னும் சொல் ஒரு பொருளின் பெயரையும் ஆகுபெயராய்த் தான் குறிக்கும் பொருளையும் உணர்த்தும். உலக வழக்கில் இரண்டுபேர் மூன்று பேர் என்பன ஈராட்கள் மூவாட்கள் என உயர்திணைப் பொருளைக் குறித்தல் காண்க. பேர் என்பது பெயர் என்பதன் மரூஉ. 2. பாலறி சொல்லுள் ஒரு சாரன எனப் பிரித்துக் கூறியது தன்மை முன்னிலைச் சொற்களை, அவை ஐம்பாலுணர்த்தாது ஒருமைப்பாலும் பன்மைப்பாலும் ஆகிய எண்ணையே உணர்த்துதலின். 3. யோகவிபாகம் கூட்டிப்பிரித்தல், யோகம் - கூட்டம். விபாகம் - பிரிப்பு. இருபொருள்பட அல்லது இருதொடராக ஒரு நூற்பாவமைத்தல் யோக விபாகம் . நூற்புணர்ப்பு - தந்திரவுத்தி. |