இதனதிது இத்தன்மைத் தென்னும் ஆறாதவன் பொருண்மையும் , ஒன்றனையொன்று கொள்ளு மென்னும் இரண்டாவதன் பொருண்மையும் ஒன்றனானொன்று தொழிற் படற்கு ஒக்கும் என்னும் மூன்றாவதன் பொருண்மையும், முறைப் பொருண்மையைக் கொண்டு நின்ற பெயர்ச் சொல்லினது ஆறாம் வேற்றுமைப் பொருண்மையும் , நிலத்தை வரைந்து கூறும் பொருண்மையும் பண்பின்கணாம் பொருவுமாகிய ஐந்தாவதன் பொருண்மையும் , காலத்தின் கண் ணறியப்படும் ஏழாம் வேற்றுமைப் பொருண்மையும் பற்றுவிடு பொருண்மையும் , தீர்ந்துமொழிப் பொருண்மையுமாகிய ஐந்தாவதன் பொருண்மையும், அவைபோல்வன பிறவும் நான்கனுருபாற் றோன்றுதற் கண் தொன்னெறி மரபின; எ - று. எ - டு:யானைக்குக்கோடு கூரிது எனவும் , இவட்குக் கொள்ளுமிவ்வணி எனவும் , அவற்குச் செய்யத்தகு மக்காரியம் எனவும் , ஆவிற்குக் கன்று எனவும் , கருவூர்க்குக் கிழக்கு எனவும் , சாத்தற்கு நெடியன் எனவும் , காலைக்கு வரும் எனவும் மனைவாழ்க்கைக்குப் பற்றுவிட்டான் எனவும் ஊர்க்குத் தீர்ந்தான் எனவும் , அப் பொருளெல்லாவற்றின் கண்ணும் நான்காமுருபு வந்தவாறு கண்டு கொள்க. வன்பால் மென்பால் என்பவாகலின் நிலத்தைப் பாலென்றார். `சிறப்பே நலனே காதல் வலியோடு அந்நாற் பண்பும் நிலைக்கள மென்ப. (பொருள் - 279) என உவமை நிலைக்களத்தைப் பண்மென்ப வாகலின், `பண்பினாக்கம்' என்றார். இதுவும் வேற்றுமை மயக்கமாகலின் மேற்கூறப்பட்ட வற்றொடு வையாது இத்துணையும் போதந்து வைத்த தென்னையெனின்;- அது தொகை விரிப்ப மயங்குமதிகாரம்; இது தொகையல்வழி யானையது கோடு கூரிது என்னுந் தொடர் மொழிப்பொருள் சிதையாமல் யானைக்குக் கோடு கூரிது என நான்காவது ஆண்டுச் சென்று நின்ற தாகலான், அவற்றோடு வையாராயினாரென்பது. அஃதேல் , ஆவின்கன்று எனவும் கருவூர்க்கிழக்கு எனவுந் தொகையாயும் வருதலின், அப் பொருடகண் நான்காவது வருதல் ஈண்டுக் கூறற்பாற்றன்றெனின் ;- அஃதொக்குமன்றாயினும் , பிறவேற்றுமைப் பொருட்கண் நான்காவது சேறலொப்புமையான் அவற்றிற்கு வேறோர் சூத்திரஞ் செய்யாது இவற்றோ டொருங் கோதினா ரென்பது . அன்னபிறவு மென்றதனான் , ஊர்க்கட்சென்றான். ஊர்க்கணுற்றது செய்வான் என்னு மேழாவதன் பொருட் கண்ணும் , ஊரிற்சேயன் என்னும் ஐந்தாவதன் பொருட் கண்ணும் , ஊர்க்குச் சென்றான் , ஊர்க்குற்றது செய்வான் , ஊர்க்குச் சேயன் என நான்காவது வருதல் கொள்க. பிறவுமன்ன. (27) |