வினையும், வினை முதலும், செயப்படு பொருளும், நிலமும், காலமும், கருவியுமாகிய ஆறும், இன்னதற்கு, இது பயனாக என்று சொல்லப்படும் இரண்டொடுந் தொக்குத் தொழிலது முதனிலையெட்டாமென்று சொல்லுவர் ஆசிரியர்:எ-று. ஈண்டேதுப் பொருண்மை கருவிக்கண் அடக்கப்பட்டது. தொழின் முதனிலை யென்றது தொழிலது காரணத்தை, காரியத்தின் முன்னிற்றலின் முதனிலையாயிற்று. காரணமெனினும் காரகமெனினு மொக்கும். வனைந்தான் என்றவழி, வனைதற்றொழிலும், வனைந்த கருத்தாவும், வனையப்பட்ட குடமும், வனைதற்கிடமாகிய நிலமும், அத்தொழில் நிகழுங்காலமும், அதற்குக் கருவியாகிய திகிரி முதலாயினவும், வனையப்பட்ட குடத்தைக் கொள்வானும், வனைந்ததனானாய பயனுமாகிய எட்டும் பற்றி அத்தொழில் நிகழ்ந்தவாறு கண்டு கொள்க. அஃதேல், தொழிலின் வேறாயது காரகமாகலின் வனைதற்றொழிற்கு அத் தொழில்தான் காரகமாமாறென்னை யெனின்:-வனைந்தானென்பது வனைதலைச் செய்தா னென்னும் பொருட்டாகலின், செய்தற்கு வனைதல் செயப்படுபொருள் நீர்மைத்தாய்க் காரகமாமென்பது. அற்றாகலினன்றே, கொளலோகொண்டா னென்பது இரண்டாம் வேற்றுமைத் தொடராயிற்றென்பது. இன்னதற்கு, இது பயனாக என்னும் இரண்டும் அருகியல்லது வாராமையின், அன்னமரபி னிரண்டொடு மெனப்பிரித்துக் கூறினார். அஃதேல், செய்வது முதலாகிய முதனிலை வேற்றுமை யோத்தினுள் கூறப்பட்டமையின் இச் சூத்திரம் வேண்டா வெனின் :- அற்றன்று; இரண்டாவதற்கோதிய பொருளெல்லாவற்றையுஞ் செயப்படு பொருளெனத் தொகுத்து, ஏதுவை கருவிக்கண்ணும் வினைசெய்யிடத்தைக் காலத்தின் கண்ணும் அடக்கி, ஏழாகச் செய்து, அவற்றொடு ஆண்டுப் பெறப் படாத வினையென்னு முதனிலை கூட்டி எட்டென்றாராகலின், இப் பாகுபாடு ஆண்டுப் பெறப்படாமையான், இச் சூத்திரம் வேண்டுமென்பது. இதனாற் பயன் ` நிலனும் பொருளுங் காலமும் கருவியும் ' (சொல் - 234) `செயப்படு பொருளைச் செய்தது போல' (சொல் - 246) எனவும் வினைக்கிலக்கணக்கணங் கூறுதலும் பிறவுமாம். (29)
1. (பாடம்) `பயமாக' |