3.வேற்றுமை மயங்கியல்

3.இதன்கண் ஆகுபெயர் முடிவு

அதன் இயல்பு

114முதலிற் கூறுஞ் சினையறி கிளவியும்
சினையிற் கூறும் முதலறி கிளவியும்
பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரும்
இயன்றது மொழிதலும் இருபெய ரொட்டும்
வினைமுத லுரைக்குங் கிளவியொடு தொகைஇ
அனையமர பினவே ஆகுபெயர்க் கிளவி.
 

முதற்சொல் வாய்பாட்டாற் கூறப்படுஞ் சினை யறி கிளவியும், சினைச்சொல் வாய்ப்பாட்டாற் கூறப்படும் முதலறி கிளவியும்,நிலத்துப் பிறந்த பொருண்மேல் அந்நிலப்பெயர் கூறலும், பண்புப்பெயர் அப்பண்புடையதனை யுணர்த்திப் பண்பு கொள் பெயராய் நின்றதூஉம், முதற் காரணப்பெயரான் அக் காரணத்தானியன்ற காரியத்தைச் சொல்லுதலும் அன்மொழிப் பொருண்மேனின்ற இருபெய ரொட்டும், செயப்பட்ட பொருண்மேல் அதனைச் செய்தான் பெயரைச் சொல்லுஞ் சொல்லுமென அப் பெற்றிப்பட்ட இலக்கணத்தை யுடையன ஆகுபெயர்; எ-று.

எ - டு:கடுத்தின்றான், தொங்குதின்றான் என முதற் பெயர் சினை மேலும் , இலை நட்டு வாழும், பூ நட்டு வாழும், எனச் சினைப்பெயர் முதன் மேலும், குழிப்பாடி நேரிது என நிலப்பெயர் அந் நிலத்துப் பிறந்த ஆடை மேலும், இம் மணி நீலம் எனப் பண்புப்பெயர் அப் பண்புடையதன் மேலும், இக் குடம் பொன் எனக் காரணப்பெயர் அதனானியன்ற காரியத் தின்மேலும், பொற்றொடி வந்தாள் என இருபெயரொட்டு அன்மொழிப் பொருள்மேலும், இவ்வாடை கோலிகன் எனச் செய்தான் பெயர் செயப்பட்டதன் மேலும், வந்தவாறு கண்டுகொள்க.

அன்மொழித்தொகை எச்சவியலுள் உணர்த்தப்படுதலின் ஈண்டுக் கூறல் வேண்டா வெனின் :- அன்மொழித் தொகை தொகையாதலுடைமையான் ஆண்டுக் கூறினார்; இயற்கைப் பெயர் ஆகுபெயர் எனப் பெயர் இரண்டாயடங்கும்வழி ஒரு பெயர்ப்பட்டதென மேலும் வந்தவாறு கண்டுகொள்க. அன்மொழித்தொகை எச்சவியலுளுணர்த்தப்படும்; அதனால் அவ் வாகுபெயராதலுடைமை பற்றி ஈண்டுக் கூறினார். எச்சவியலுட் கூறப்பட்டவாயினும் வினையெச்ச முதலாயின வினைச் சொல்லாதலும் இடைச்சொல்லாதலு முடைமையான் அவற்றை வினையியலுள்ளும் இடையியலுள்ளுங் கூறிய வாறு போல வென்பது.1

தொல்காப்பியனானுங் கபிலனானுஞ் செய்யப்பட்ட நூலைத் தொல்காப்பியங் கபிலமென்றல் வினைமுதலுரைக்குங் கிளவியென்றாரால் உரையாசிரியரெனின்:- அற்றன்று. ஒரு மொழியிலக்கணம் ஈண்டுக் கூறாராயினும் வெற்புச் சேர்ப்பு என்னும் பெயரிறுதி இதனையுடையானென்னும் பொருள் தோன்ற அன்னென்பதோ ரிடைச்சொல் வந்து வெற்பன், சேர்ப்பன் என நின்றாற்போல, தொல்காப்பியன் கபிலன் என்னும் பெயரிறுதி இவனாற் செய்யப்பட்டதென்னும் பொருள் தோன்ற அம்மென்பதோ ரிடைச்சொல் வந்து அன் கெடத் தொல்காப்பியம் கபிலம் என நின்றன வென்பது ஆசிரியர் கருத்தாம்; அதனான் அவை யுதாரணமாதல் உரையாசிரியர் கருத்தன்றென்க.

அனையமரபின வென்றது அவ்வாறியாதானுமோரியைபுபற்றி ஒன்றன் பெயர் ஒன்றற்காதலென ஆகுபெயரிலக்கணத்திற்குத் தோற்றுவாய் செய்தவாறு. ஒன்றன் பொருட்கண் ஒன்று சேறலென்னு மொப்புமையான் இவற்றையீண்டுக் கூறினார். அஃதேல், ஆகுபெயர் எழுவாய் வேற்றுமை மயக்க மாதலான் ஈண்டுக் கூறினாரென்றாரால் உரையாசிரிய ரெனின்:- ஆகுபெயர் ஏனை வேற்றுமையுமேற்று நிற்றலானும், எழுவாய் வேற்றுமையாய் நின்றவழியும் அது பிறிதோர் வேற்றுமைப் பொருட்கட் சென்று மயங்காமையின் வேற்றுமை மயக்கமெனப்படாமையானும் அது போலியுரை என்க.

(31)

1. ஆகுபெயரும் அன்மொழித்தொகையும் ஒன்றென்றல் பொருந்தாமை தொல்காப்பியச் சூத்திரவிருத்தியுட் காண்க.