அளவுப்பெயரும் நிறைப்பெயரும் ஆகுபெயராகக் கொள்ளுமிடமுமுடையவென்று சொல்லுவர் உணர்ந்தோர்; எ-று. பதக்குத்தூணி யென்னும் அளவுப் பெயர் இந்நெற்பதக்கு, இப்பயறு தூணி எனவும், தொடி துலாமென்னும் நிறைப் பெயர் இப்பொன்றொடி, இவ் வெள்ளி துலாம் எனவும், அளக்கப்பட்ட பொருண் மேலும் நிறுக்கப் பட்ட ஆகுபெயராய் நின்றவாறு கண்டு கொள்க. ஒன்று இரண்டென்னுந் தொடக்கத்து எண்ணுப்பெயரும் எண்ணப்பட்ட பொருண்மேனின்றவழி ஆகுபெயரேயாகலின் அவற்றை யொழித்த தென்னையெனின்:- அவை எண்ணப்படு பொருட்கு1 முரியவாகலின் ஆகு பெயரெனப்படா; அதனான் அவற்றையொழித்தாரென்பது.2 (33)
1. `ஏனைப்பொருட்கு' எனவும் பாடம். 2. எண்ணுப்பெயர் ஆகுபெயராதல் தொல்காப்பியச் சூத்திரவிருத்தியுட் காண்க. |