3.வேற்றுமை மயங்கியல்

இதன்கண் ஆகுபெயர் முடிவு

அதற்குப் புறனடை

117கிளந்த வல்ல வேறுபிற தோன்றினும்
கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே.
 

சொல்லப்பட்டனவேயன்றிப் பிறவும் ஆகுபெயருளவேல், அவையெல்லாஞ் சொல்லப்பட்டவற்ற தியல்பானுணர்ந்து கொள்க; எ-று.

சொல்லப்பட்டவற்ற தியல்பாவது யாதானுமோ ரியைபு பற்றி ஒன்றன்மேல் வழங்கப்படுதல்.

யாழ்குழல் என்னுங் கருவிப்பெயர் யாழ் கேட்டான், குழல்கேட்டான் என அவற்றானாகிய ஓசைமேலும் ஆகுபெயராய் நின்றன. யானை பாவை என்னும் உவமைப்பெயர் யானை வந்தான், பாவை வந்தாள் என உவமிக்கப்படும் பொருண் மேலும், ஏறு குத்து என்னுந் தொழிற்பெயர் இஃதோரேறு, இஃதோர்குத்து என அத்தொழிலானாம் வடுவின் மேலும், வருவனவெல்லாங் கொள்க. பிறவுமன்ன.

இயைபுபற்றி ஒன்றன் பெயர் ஒன்றற்காங்கால் அவ்வியைபு ஓரிலக்கணத்ததன்றி வேறுபட்ட இலக்கணத்தையுடைத்து, அவ்விலக்கண மெல்லாம் கடைப்பிடித்துணர்க என்பார், `வேறுபிற தோன்றினும்' என்றார்

(34)

வேற்றுமை மயங்கியல் முற்றிற்று