4.விளிமரபு

2.உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு

அளபெடைப் பெயர்

125அளபெடை மிகூஉம் இகர இறுபெயர்
இயற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப.
 

அளபெடை தன்னியல்பு மாத்திரையின் மிக்கு நான்கும் ஐந்தும் மாத்திரை பெற்று நிற்கும் இகரவீற்றுப் பெயர் இ ஈ யாகாது இயல்பாய் விளியேற்குஞ் செயற்கையை யுடையவாம் ; எ-று.

அளபெடைமிக்கியற்கைவாகுஞ் செயற்கைய வென்னாது `மிகூஉ மிகர விறுபெயரென' அநுவதித்தாரேனும் மாத்திரைமிக் கியல்பாமென்பது அதனாற் பெறப்படும்.

எ - டு:1தொழீஇஇ எனவும், தொழீஇஇஇ எனவும் வரும்.

இ ஈ யாகாமையின் இயற்கையவாகுமென்றும், மாத்திரை மிகுதலாகிய செயற்கையுடைமையாற் செயற்கைய வென்றுங் கூறினார்.இகரவிறுபெயரென்பது இகரத்தானிற்ற பெயரென விரியும்.

(8)

1. தொழிலீஇஇ என்பதனை `அளபெடை மிகூஉம் இகரவிறுபெயர்' என்பர் நச்சினார்க்கினியர் . `மலிதிரை யூர்ந்து' என்னும் முல்லைக் கலியுட் காண்க.