4.விளிமரபு

2.உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு

முறைப் பெயர்

126முறைப்பெயர் மருங்கின் ஐயென் இறுதி
ஆவொடு வருதற் குரியவு முளவே.
 

முறைப்பெயரிடத்து ஐயென்னு முடிபு ஆயாகாது ஆவொடு வருதற்கு முரியனவுள ; எ-று.

எ - டு:அன்னை அன்னா எனவும் ; அத்தை அத்தா எனவும் வரும்.

உம்மையான் அன்னாய் அத்தாய் என ஆயாதலுமுடைய வென்பதாம் . உம்மை பிரிந்து நின்றது.

(9)