செப்பினையும் வினாவினையும் வழுவாமற் போற்றுக ; எ-று. செப்பென்பது வினாய பொருளை அறிவுறுப்பது. அஃது இரண்டு வகைப்படும். செவ்வன் இறையும்1 இறை பயப்பதும்2 என. உயிர் எத்தன்மைத்து என்று வினாயவழி உணர்தல் தன்மைத்து என்றல் செவ்வன் இறையாம். உண்டியோ என்று வினாயவழி வயிறு குத்திற்று என்றல், உண்ணேன் என்பது பயந்தமையின் இறை, பயப்பதாம். கருவூர்க்குச் செல்லாயோ சாத்தா எனப் பருநூல் பன்னிரு தொடி என்பது செப்புவழுவாம். சொல் எப்பொருள் உணர்த்தும் என்று வினாயவழிச் சொல் ஒரு பொருளும் உணர்த்தாது என்பதும் அது. வினாய பொருளை வினாவால் உணர்ந்து வினாய பொருளை யன்றித்தான் குறித்த பொருளைச் செப்பால் உணர்த்துகிறா னாகலின் என்பது. வினா இன்றியும் செப்பு நிகழ்தலின் வினாய பொருளையென்னாது அறிவுறுப்பது செப்பது எனின், வினாய பொருளை யெனல் வேண்டா எனின், அறியலுறவினை அறிவுறுத்தலின் வினாவும் செப்பாய் அடங்குதலானும் செப்பென்பது உத்தர மென்பதேனே ஒருபொருட் கிளவியாகலானும், வினாயபொருளை யறிவுறுத்தலே இலக்கணமா மென்பது. குமரியாடிப் போந்தேன் சோறு தம்மின் என வினாவின்றி நிகழ்ந்த சொல்யாண்டடங்கு மெனின்: -அறிய லுறுதலை யுணர்த்தாது ஒன்றனை அறிவுறுத்து நிற்றலிற் செப்பின்பாற் படும். வினா எதிர்வினாதல், ஏவல், மறுத்தல் ,உற்றதுரைத்தல் ,உறுவது கூறல் உடம்படுதல் எனச்செப்பு அறுவகைப்படுமென்று உரையாசிரியர் கூறினாராலெனின்:- உயிரெத் தன்மைத் தென்ற வழி உணர்தற்றன்மைத் தென்றன் முதலாயின அவற்று ளடங்காமையானும், மறுத்தலும் உடம்படுதலும் வினாவப்பட்டார் கண்ணன்றி ஏவப்பட்டார் கண்ணவாகலானும் அறுவகைப்படுமென்று பிறர்மத மேற்கொண்டு கூறினாரென்பது. வினாவாவது அறியலுறவு வெளிப்படுப்பது. அது மூவகைப்படும். அறியான் வினாவும், ஐயவினாவும்,அறிபொருள் வினாவுமென. அறியான்வினா உயிர் எத்தன்மைத்தென்பது. ஒருபுடையானும் அறியப்படாத பொருள் வினாவப் படாமையிற் பொதுவகையான் அறியப்பட்டுச் சிறப்பு வகையான் அறியப்படாமை நோக்கி அறியான் வினாவாயிற்று. ஐயவினா குற்றியோ மகனோ தோன்றுகின்ற உருவென்பது. அறிபொருள் வினா அறியப்பட்ட பொருளையே ஒருபயன் நோக்கி அவ்வாய்பாட்டினொன்றான் வினாவுவது. பயன் வேறறிதலும்3 அறிவுறுத்தலு முதலாயின. கறக்கின்ற எருமை பாலோ சினையோ என்பது வினாவழுவாம். ஒரு பொருள் காட்டி இது நெடிதோ குறிதோ என்பதும் அது. உரையாசிரியர் அறிபொருள் வினாவை அறிவொப்புக் காண்டலும் ,அவனறிவுதான் காண்டலும் , மெய்யவற்குக் காட்டலும் என விரித்து ஏனைய கூட்டி ஐந்தென்றார். இருவகை செப்பினும் மூவகை வினாவினும், செவ்வன் இறையும் அறியான் வினாவும் ஐயவினாவும் வழாநிலையாகலின், வழாஅலோம்பல் என்பதனாற் கொள்ளப்படும் ஏனைய வழுவமைப்புழிக் காணப்படும். வினா வழீஇயினவிடத்து அமையாதென்று உரையாசிரியர் கூறினாராலெனின்:- அற்றன்று: `யாதென வரூஉம் வினாவின் கிளவி' (சொல்-32) எனவும் `வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல்' (சொல்-244) எனவும் முன்னர் வழுவமைப்பர் ஆகலான் அது போலியுரை யென்க. (13)
1. செவ்வன் இறை - நேர்விடை. 2.இறைபயப்பது - உற்றது உரைத்தல் விடை 3. வேறறிதல் - தானறிந்த பொருளன்றி வேறேது முண்டோ என அறிதல். |