1.கிளவியாக்கம்

2.பால்

வினாவும், விடையும் அமையும் வகை

14வினாவும் செப்பே வினாஎதிர் வரினே.
 

வினாய பொருளை ஒருவாற்றான் அறிவுறுத்து வினாவிற்கு மறுமொழியாய் வரின், வினாவும் செப்பாம்; எ-று.

சாத்தா உண்டியோ என்று வினாயவழி உண்ணேனோ எனவரும். வினா வாய்பாட்டான் வந்ததாயினும், உண்பல் என்பது கருத்துப்பொருளாகலின் செப்பெனப்படும். உண்டியோ என்று வினாயவழி உண்பல் உண்ணேன் என்று இறந்து தானொன்றை வினாவுவான் போலக் கூறலின் வழுவமைதியாயிற்று. இது செப்புவழுவமைதியேல் `செப்பே வழீஇயினும் என்' புழியடங்குமெனின் :-ஒன்றன் செப்பு ஒன்றற் காவதன்றி' 1 வினாச் செப்பாயினமையின், வேறு கூறினார்.

(14)

1. ஒன்றன் செப்பு ஒன்றற்காவது -முட்குத்திற்றா என்னும் வினாவிற்கு விடையாகிய முட்குத்திற்று என்பது, செல்வாயோ என்ற வேறார் வினாவிற்கு விடையாய் வந்து செல்லேன் என்று பொருள் படுவது.