4.விளிமரபு

2.உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு

ரகர ஈற்றுள் விளி ஏலாதவை

143நும்மின் திரிபெயர்1 வினாவின் பெயரென்று
அம்முறை யிரண்டும் அவற்றியல் பியலும்.
 

நும்மின் திரிபாகிய நீயிரும் வினாவின் பெயராகிய யாவரும் இரண்டும் , மேற்கூறிய சுட்டுப் பெயரே போல , விளியேலா; எ - று,

நீயிரென்பதனை நும்மெனத் திரியாது நும்மென்பதனை நீயிரெனத் திரிப்பினும் இழுக்காதென்னுங் கருத்தான் எழுத்தோத்தினுள் நும்மென நிறுத்தித் திரித்தா ராகலான் , அதுபற்றி நீயிரென்பதனை நும்மின் றிரிபெயரென்றார் .

(26)

1. நும்மின் திரிபெயர்:- நும்மின் திரிபெயர் நீயிர் என்பது சரியன்று. எழுவாய்ப் பெயரினின்று வேற்றுமைப் பெயர் தோன்றுமேயன்றி வேற்றுமைப் பெயரினின்று எழுவாய்ப்பெயர் தோன்றாது , நும் என்பது நூம் என்னும் வழக்கமற்ற பண்டை முன்னிலைப் பன்மைப் பெயரின் வேற்றுமைத் திரிபாகும் . நீயிர் என்பது நீ என்னும் முன்னிலை ஒருமைப்பெயர் `இர்' விகுதியொடு கூடியதாகும்.

ஒருமை : நூன் < நுன் - நுன்னை , நுன்னால் மு - ன .
பன்மை : நூம் <நும் - நும்மை . நும்மால் மு - ன; நுன் < உன் . நும் < உம் . நூங்கள் < நுங்கள் < உங்கள்
ஒருமை : நீன் < நின் . நீன் < நீ.
பன்மை : நீம் < நிம் . நீம் + கள் = நீங்கள். நீ = இர் = நீயிர் - நீவிர்.