செவ்வனிறையாகாது செப்புவழு விவரினும் கடியப்படாது. ஒருவாற்றான் வினாய பொருட்கு இயைபுபட்ட கிளவி யாதற்கண்: எ-று. சாத்தா உண்டியோ என்று வினாயவழி, நீ உண் என்றும், வயிறு குத்தும் என்றும், பசித்தேன் என்றும், பொழுதாயிற்று என்றும் வரும். இவை செவ்வன் இறை அல்லவேனும், வினாய பொருளை ஒருவாற்றான் அறிவுறுத்தலில், அமைந்தவாறு கண்டு கொள்க. அஃதேல், இவை `தெரிபு வேறு நிலையலுங் குறிப்பின் தோன்றலும்' (சொல் - 157) என்புழிக் குறிப்பின் தோன்றலாய் அடங்குமாதலின் ஈண்டுக் கூறல் வேண்டா எனின் : அவ்வாறு அடங்குமாயினும், `செப்பும் வினாவும் விழாஅலோம்பல்' (சொல் - 13) என்றதனான் இவையெல்லாம் வழுவாதல் எய்திற்று, அதனான் அமைக்கல் வேண்டும் என்பது. (15) |