புறனடை

மூவகைப் பெயரிலும் சேய்மை விளி

உயர்திணைப் பெயருள் விளி ஏலாதவை

154தநநு எஎன அவைமுதலாகித்
தன்மை குறித்த னரள என் இறுதியும்.
அன்ன பிறவும் பெயர்நிலை வரினே
இன்மை வேண்டும் விளியொடு கொளலே.
 

தநநு என்னு முயிர்மெய்யும் எ என்னுமுயிரையும் முதலாகவுடையவாய் ஒருவனது கிழமைப் பொருண்மையைக் குறித்து நின்ற ன ர ள என்னும் மூன்று புள்ளியை இறுதியாகவுடைய சொல்லும் அவை போல்வன பிறவுமாகிய பெயர்ச்சொல் வருமாயின், விளியொடு பொருந்துதலில்; எ-று

எ - டு: தமன், தமர், தமள், நமன், நமர், நமள், நுமன், நுமர், நுமள், எமன், எமர், எமள், எனவும்; தம்மான், தம்மார், தம்மாள், நம்மான், நம்மார், நம்மாள், நும்மான், நும்மார், நும்மாள், எம்மான், எம்மார், எம்மாள் எனவும் வரும்.

அன்னபிறவுமென்றதனான், மற்றையான், மற்றையார், மற்றையாள்; பிறன், பிறர், பிறள் என வருவன கொள்க.

அஃதேல், இவற்றைத் தத்தமீற்றகத் துணர்த்தாது ஈண்டுக் கூறிய தென்னை யெனின்:- இவற்றை யீற்றகத் துணர்த்தின் மூன்று சூத்திரத்தா னுணர்த்தல் வேண்டுதலிற் சூத்திரம் பல்கும; அதனானாண்டுணர்த்தாராயினார். அஃதேல், உயர்திணை யதிகாரத்துக்குப்பின் வைக்கவெனின்:- ஆண்டு வைப்பின் `விளம்பிய நெறிய விளிக்குங்காலை' (சொல்-150) என்னும் மாட்டேற்று இனிது பொருள் கொள்ளாதாம், அதனால் பிறிதிடமின்மையின் ஈண்டு வைத்தாரென்பது .

விளிமரபு முற்றிற்று.

(37)