5.பெயரியல்

சொற்களின் இயல்பு

குறிப்பும் வெளிப்படையும்

157தெரிபுவேறு நிலையலுங் குறிப்பில் தோன்றலும்
இருபாற் றென்ப பொருண்மை நிலையே.
 

மேற் கூறப்பட்ட பொருண்மை தெரிதல், சொன்மாத்திரத்தான் விளங்கி வேறுநிற்றலுஞ் சொன்மாத்திரத்தாற்றோன்றாது சொல்லொடு கூடிய குறிப்பாற் றோன்றலுமென, இரண்டு கூற்றை யுடைத்தென்று கூறுவர் ஆசிரியர் ; எ-று.

எ - டு: அவன், இவன், உவன்; வந்தான், சென்றான் என்றவழிப் பொருள்தெரிபு வேறு நின்றன. ஒருவர் வந்தார் என்றவழி ஆண்பால் பெண்பாலென்பதூஉம் சோறுண்ணாநின்றான் கற்கறித்து. `நன்கட்டாய்' என்ற வழித் தீங்கட்டாய் என்பதூஉம் குறிப்பாற் றோன்றின. கடுத்தின்றான், தெங்குதின்றான் எனப் பிறிதின் பெயராற் பிறிது பொருள்தோன்றலுங் குறிப்பிற் றோன்றலாம். தின்றா னென்னுந் தொழிலொடு முதற்பொருள் இயையாமையின் அதனோ டியையுஞ்சினைப்பொருள் அத்தொடராற்றலாற் பெறப்பட்டமையால் குறிப்பிற் றோன்றலாகாதெனின்:- அற்றன்று; அவ்வியையாமை சொல்லுவான் குறிப்புணர்தற் கேதுவாவதல்லது முதற் பெயரைச் சினைப்பொருட்டாக்கு மாற்றலின்றாகலான். அதுவுங் குறிப்பிற் றோன்றலேயா மென்க. பிறவு மன்ன.

இளைதாக முண்மரங் கொல்க களையுநர்
கைகொல்லுங் காழ்த்த இடத்து' (குறள்-879)

என்னுந் தொடர்மொழியான், நிலைபெற்றபின் களையலுறிற் களையலுற்றாரை அவர்தாங் கொல்வர். அதனாற் றீயாரை அவர் நிலைபெறாக் காலத்தே களைக என்னும் பொருள் விளங்குதலுங் குறிப்பிற் றோன்றலாம். அணியிலக்கணங் கூறுவார் இன்னோரன்னவற்றைப் பிறிது மொழித லென்பதோ ரணி யென்ப.

(3)