செப்பின்கண்ணும் வினாவின்கண்ணும் சினைக்கிளவிக்கும் முதற்கிளவிக்கும் உறழ்பொருளுந் துணைப்பொருளும் அவ்வப்பொருளுக்கு அவ்வப்பொருளே யாம்; எ-று. எனவே, சினையும் முதலும் தம்முள் மயங்கி வருதல் வழுஎன்பதாம். உறழ்பொருளாவது ஒப்புமை கூறாது மாறுபடக் கூறப்படுவது. துணைப்பொருளாவது ஒப்புமை கூறப்படுவது. எ - டு: இவள் கண்ணின் இவள் கண் பெரிய, நும் அரசனின் எம் அரசன் முறை செய்யும் எனவும்; இவள் கண்ணின் இவள் கண் பெரியவோ, எம் அரசனின் நும் அரசன் முறை செய்யுமோ எனவும்; இவள் கண் ஒக்கும் இவள் கண், எம் அரசனை ஒக்கும் நும் அரசன் எனவும்; இவள் கண் ஒக்குமோ இவள் கண், எம் அரசனை ஒக்குமோ நும் அரசன் எனவும் வரும். `அவன் கோலினுந் தண்ணிய தடமென் தோளே' (பட்டினப்-300.1) எனவும், `துளிதலைத் தலைஇய தளிரன்னோனே' (குறுந்.222) எனவும் மயங்கி வந்தன வழுவாம் பிறவெனின்; அவை செய்யுள் பற்றி வரும் உவம வழு ஆகலின் ஈண்டைக்கு எய்தா, அணியியலுள் பெறப்படும். இம் மகள் கண் நல்லவோ கயல் நல்லவோ என வழக்கின் கண்ணும் மயங்கி வருமாலெனின் ; உண்மைஉணர்தற்கு வினாயதன்றி ஐயவுவமைவாய்பாட்டாற் கண்ணைப் புனைந்துரைத்தல் கருத்தாகலின் அன்னவை யெல்லாம் உரை என்னுஞ் செய்யுளாம் என்பது இந்நங்கை முலையின் இந்நங்கை கண் நல்ல என்னுந் தொடக்கத்தன மயக்கம் இன்மையின் இலக்கண வழக்காம் பிறவெனின்; அற்றன்று, ஒத்த பண்பு பற்றியன்றே பொருவுவது ; கண்ணொடு முலைக்கு ஒத்த பண்பின்மையால் பொருவுதல் யாண்டையது, ஒத்த பண்பு பற்றிய பொருவுதற் கண்ணது இவ்வாராய்ச்சி என்பது. காக்கப்பட்டன செப்பு வழாநிலையும் வினா வழா நிலையும் என்பார். `செப்பினும் வினாவினும்' என்றார். `வழாலோம்பல்' (சொல் 13) என்புழி அடங்குமாயினும், நுண்ணுணர் வுடையார்க்கல்லது அதனால் உணர்தலாகாமையின், விரித்துக் கூறியவாறு. தன்னினமுடித்தல் என்பதனால் `பொன்னுந் துகிரும் முத்தும் மணியும்' (புறம்-218) என எண்ணுங்காலும் இனமாய பொருளே எண்ணப்படுமென்பது கொள்க. (16) |