5.பெயரியல்

பெயர்ச்சொல்லின் இலக்கணம்

161இருதிணைப் பிரிந்த வைம்பாற் கிளவிக்கும்
உரியவை யுரிய பெயர்வயி னான.
 

இருதிணைப்பிரிந்த ஐம்பாற் கிளவியாதற்குப் பெயருள் உரியன உரியவாம் ; எ-று.

அவன், பெண்மகன், சாத்தான் என னகரவீறு ஆடூவிற்கும் மகடூவிற்கும், அஃறிணையாண்பாற்கும் உரித்தாய் வருதலானும், அவள், மக்கள், மகள் என ளகரவீறு மகடூவிற்கும் பல்லோர்க்கும், அஃறிணைப் பெண்பாற்கும் உரித்தாய் வருதலானும், பெண்டாட்டி நம்பி எனவும், ஆடூ மகடூஎனவும் இகரவீறும் ஊகாரவீறும் இருபாற்கு முரியவாய் வருத லானும், வினைச் சொற்போல, இன்னவீறு இன்னபாற் குரித்தெனப் பெயர்ச் சொல் ஈறுபற்றி1 உணர்தலாகாமையின். `உரியவையுரிய' என்றார். பிறவுமன்ன.

பல்குமென் றஞ்சி இன்ன பெயர் இன்ன பாற் குரித்தெனக் கிளந்தோதாராயினார். அஃதேல், இவற்றது பாற் குரிமை யெற்றாற் பெறுதுமோ வெனின்:- உரியவையென்றது வழக்கின்கட் பாலுணர்த்துதற் குரியவாய் வழங்கப்படுவன வென்றவாறன்றே; அதனான் வழக்கு நோக்கிக் கொள்ளப் படுமென்பது.

மற்றும், நஞ்சுண்டான் சாம் என்பது ஒருபாற்குரிய சொல்லாயினும் நஞ்சுண்டாள் சாம், நஞ்சுண்டார் சாவர், நஞ்சுண்டது சாம், நஞ்சுண்டன சாம் என ஏனைப் பாற்கு முரித்தாம் அச் சொல்லென இப் பொருண்மை யுணர்த்துகின்றது இச் சூத்திரமென்றாரால் உரை யாசிரியரெனின்:- நஞ்சுண்டல் சாதற்குக் காரணமென்பான் ஒரு பான்மேல் வைத்து நஞ்சுண்டான் சாமென்றதல்லது, ஆண்டுத் தோன்றும் ஆண்மையும் ஒருமையுஞ் சாதற்குக் காரணமென்னுங் கருத்தினனல்லன் ; அதனாற் சொல்லுவான் கருத்தொடு கூடிய பொருளாற்றலாற் சாதல் ஏனைப் பாற்கும் ஒக்குமெனச் சேறல் சொல்லி லக்கணத்திற் கூறப் படாமையான், ஆசிரியர்,

`ஒருபாற் கிளவி யேனைப்பாற் கண்ணும்
வருவன தானே வழக்கென மொழிப' (பொருளியல்-28)

என இப் பொருண்மை பொருளியலிற் கூறினாராகலின், இச் சூத்திரத்திற்கு இஃதுரையாதல் உரையாசிரியர் கருத்தன் றென்க.அல்லதூஉம், பார்ப்பான் கள்ளுண்ணான் என்றவழிக் கள்ளுண்ணாமை சாதி பற்றிச் செல்வதொன்றாகலின் பார்ப் பனிக்கும் பார்ப்பார்க்குமல்லது பிறசாதியார்க்கும் அஃறிணைக்குஞ் சொல்லாமையின், ஐம்பாற்கிளவிக்குமுரிய வென்றல் பொருந்தாமையானும் அவர்க்கது கருத்தன்மை யறிக.

(7)

1. ` சிங்கம் நடைப்பதுபோற்சேர்ந்து பூத்தூய்ப் பல வாழ்த்தத்
தங்கா விருப்பில் தம்பெருமான் பாத முடி தீட்டி'
என்னும் சிந்தாமணி முத்தி இலம்பகம் 10-ஆம் செய்யுளடிகளில் ஆன் விகுதி பெண்பாலுணர்த்தி வருவதை யறிக.