5.பெயரியல்

3.உயர்தினைப் பெயர்கள்

162அவ்வழி
அவன் இவன் உவனென வரூஉம் பெயரும்
அவள் இவள் உவளென வரூஉம் பெயரும்
அவர் இவர் உவரென வரூஉம் பெயரும்
யான்யாம் நாமென வரூஉம் பெயரும்
யாவன் யாவள் யாவ ரென்னும்
ஆவயின் மூன்றோடு அப்பதி னைந்தும்
பாலறி வந்த உயர்திணைப் பெயரே.
 

மூவகையாக மேற்சொல்லப்பட்ட பெயருள், அவனென்பது முதலாக யாவரென்ப தீறாகச் சொல்லப்பட்ட பதினைந்தும் பால் விளங்க நிற்கும் உயர்திணைப்பெயர் ; எ-று.

யானென்பது, ஒருவன் ஒருத்தி யென்னும் பகுதி யுணர்த்தாதாயினும், அத்திணை யொருமை யுணர்த்தலின் பாலறிவந்த பெயராம். அல்லதூஉம், பாலறி வந்தவெனப் பன்மைபற்றிக் கூறினாரெனினுமமையும்.

(8)