இப்பெயர் பதினைந்தும் மேற்கூறப்பட்டன போல பாலறிவந்த உயர்திணைப்பெயராம் ; எ-று. ஆண்மையடுத்த மகனென் கிளவி ஆண்மக னென்பது ஒற்றுமை நயத்தான், ஆண்மை யுணர்த்துஞ் சொல்லை ஆண்மையென்றார். இது பெண்மையடுத்த வென்புழியு மொக்கும். பெண்மையடுத்த மகளென் கிளவியும் பெண்மை யடுத்த இகரவிறுதியுமாவன பெண்மகள், பெண்டாட்டி என்பன. நம்மூர்ந்துவரூஉ மிகரமும் ஐகாரமுமாவன நம்பி, நங்கை என்பன. நமக்கின்னாரென்னும் பொருள்பட வருதலின் நம் மூர்ந்துவரூஉ மென்றார். அவை நம்மென்பது முதனிலையாக அப் பொருளுணர்த்தாவாயின், நம்மூர்ந்து வரூஉமிகரமும் நம்மூர்ந்துவரூஉ மைகாரமுமெனப் பிரித்துக் கூறல் வேண்டுமென்பது. இவை யுவர் சொல், முறைமை சுட்டா மகனு மகளுமாவன முறைப்பெயரன்றி மகன் மகளென ஆடூ மகடூ வென்னுந் துணையாய் வருவன. மாந்தர் மக்களென்பன பன்மைப் பெயர். ஆடூமகடூ வென்பன மேற் சொல்லப்பட்டன. சுட்டு முதலாகிய அன்னும் ஆனுமாவன அவ்வாளன், இவ்வாளன், உவ்வாளன்; அம்மாட்டான் , இம்மாட்டான், உம்மாட்டான் என்பன. இவற்றுள் ஆனீறு இக்காலத்துப் பயின்று வாரா. அவை முதலாகிய பெண்டென் கிளவி இக்காலத்து விழுந்தனபோலும், பெண்டன் கிளவி யென்று பாடமோதி, அவையாவன அவ்வாட்டி, இவ்வாட்டி, உவ்வாட்டி என்பாருமுளர். ஒப்பொடு வரூஉங் கிளவியாவன பொன்னன்னான்; பொன்னன்னாள் என்னுந் தொடக்கத்தன. இவை மேலனபோலப் பயின்றுவாராமையின், அவற்றொடொருங்கு வையாது வேறு கூறினார். (9) |