5.பெயரியல்

உயர்தினைப் பெயர்கள்

165நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே
வினைப்பெயர் உடைப்பெயர் பண்புகொள் பெயரே
பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே
கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரே
இன்றிவ ரென்னும் எண்ணியற் பெயரோடு
அன்றி யனைத்தும் அவற்றியல் பினவே.
 

நிலப்பெயர் முதலாகச் சொல்லப்பட்டனவும் மேலனபோலப் பாலறிவந்த உயர்திணைப் பெயராம் ; எ-று.

நிலப்பெயர் - அருவாளன் , சோழியன் என்பன , குடிப்பெயர் - மலையமான் , சேரமான் என்பன . குழுவின் பெயர் - அவையத்தார் , அத்தி கோசத்தார் என்பன , வினைப்பெயர் - வருவார் , செல்வார் என்பன ; தச்சன் , கொல்லன் என்பனவு மவை. உடைப்பெயர் - அம்பர் கிழான் , பேரூர்கிழான் என்பன ; வெற்பன் , சேர்ப்பன் என்பனவுமவை. பண்பு கொள் பெயர் - கரியான். செய்யான் என்பன . பல்லோர்க்குறித்த முறை நிலைப் பெயர் - தந்தையார் , தாயர் என்பன. பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயர் - பெருங்காலர், பெருந்தோளர் என்பன . பல்லோர்க் குறித்த திணை நிலைப் பெயர் - பார்ப்பார் , அரசர் , வணிகர் , வேளாளர் , ஆயர் , வேட்டுவர் என்பன. பல்லோர்க் குறித்த வென்று விசேடித்தலான் , இம் மூவகைப் பெயருள் ஒருமைப்பெயர் இரண்டு திணைக்கு முரியவாம் . கூடிவரு வழக்கின் ஆடியற் பெயர் - பட்டிபுத்திரர்1 கங்கைமாத்திரர் என்பன. இவை ஆடல்குறித் திளையார் பகுதிபடக் கூடியவழி யல்லது வழங்கப் படாமையிற் குழுவின் பெயரின் வேறாயின. அக்குழுவின் பெயர் ஒரு துறைக்கண் உரிமை பூண்ட பல்லோர்மேல் எக்காலத்தும் நிகழ்வன. இன்றிவரென்னு மெண்ணியற் பெயராவன ஒருவர், இருவர் , முப்பத்துமூவர் என்பன. இன்றிவரென்பது இத்துணைய ரென்னும் பொருட்டுப்போலும். எண்ணாகிய வியல்பு பற்றிப் பொருளுணர்த்துதலான் `எண்ணியற் பெயர்' என்றார்.

ஒருநிமித்தம்பற்றிச் சேறலிற் பல்பெயர் ஒரு பெயராக அடக்கப் பட்டமையான் , நிலப்பெயர் முதலாயினவற்றை வேறு கூறினார் . அஃதேல் , ஒப்பொடு வரூஉங்கிளவியும் அன்னதாகலின் இவற்றொடு வைக்கற்பாற்றெனின்;- அற்றேனும் , வழக்குப்பயிற்சி யின்மையான் அவற்றொடு வைத்தா ரென்க.

(11)

1. பட்டிபுத்திரர் - பட்டியென்பவன் குமாரர். இப்பட்டி யென்பவன் உச்சயினிபுரத் தரசனாகிய விக்கிர மார்க்கன் மந்திரி. இவன் மதிநுட்ப நூலோடுடையவனாக விருந்ததோடு மக்களாற் செயற்கரிய அரும் பெருங் காரியங்களை யியற்றியவன். இவன் பேராற்றலையும் மதி நுட்பத்தையு மறியாத தமிழ்மக்கள் இலர் . அவன் மக்களெனவே அன்னாரும் அத்தகைய பேராற்றலும் , மதி நுட்பமும் , செயற்கரியனவற்றைச் செய்து போதரும் வன்மையும் உடையார் என்பது விளக்கிய , பட்டிபுத்திரர் என்றார் . கங்கைமாத்திரர் - கங்கையை அளவிடுபவர் .மக்களால் அளவிடற்கரிய கங்கையினையும் அளவிட்டறியும் ஆற்றலுடையார் என்பது விளக்கிய கங்கை மாத்திரர் என்றார் . இப்பெயர்கள் பண்டைக் காலத்துச் சிறார்கள் விளையாடல் குறித்த காலத்துப் படைத்திட்டுக் கொண்ட பெயராம்.

இக்காலத்தும் இளந் துணைமகார் பலர் குழுமித் தம்மிற் கூடிவிளையாடல் குறித்த போழ்தத்து அம் மகாரில் இருவர் தலைவராக நிற்க ஏனையோர் இருவர் இருவராகப் பிரிந்து தனியிடஞ் சென்று தம்மிற் பெயர் புனைந்து தலைவர்களை யண்மி `காற்றைக் கலசத்தி லடைத்தவன் ஒருவன்' `கடலைக் கையால் நீந்தினவன் ஒருவன்' இவருள் நுமக்குயாவன் வேண்டு மெனவும், `வானத்தை வில்லாக வளைத்தவன் ஒருவன்' , `ஆற்றுமணலைக் கயிறாகத் திரித்தவனொருவன் இவருள் யாவன் நுமக்கு வேண்டு' மெனவும் வினவுவர்; அத்தலைவர்கள் இன்னின்னார் வேண்டுமென , அவர்கள் பகுதியிற் சேர்ந்து ஆடலியற்றுவர் என்க. ஆசிரியர் நச்சினார்க்கினியர் இளந்துணை மகார் தம்மிற் கூடி விளையாடல் குறித்த பொழுதைக்குப் படைத்திட்டுக் கொண்ட பெயர் . அவை பட்டி புத்திரர் , கங்கை மாத்திரர் என்றதனானும் இது நன்கு விளங்கும்.