பல்லவென்பது முதலாகக் கூறப்பட்ட ஒன்பது பெயரும் மேற்கூறப்பட்ட அஃறிணைப் பெயர்போலப் பாலுணர நிற்கும் ; எ-று. பல்ல, பல, சில , உள்ள , இல்ல வென்னும் ஐந்து பெயரும் தம்மை யுணர்த்தி நின்றன. அல்லன பொருளுணர்த்தி நின்றன. வினைப் பெயர்க்கிளவியாவன வருவது, செல்வது என்பன ; பண்பு கொள் பெயராவன கரியது , செய்யது என்பன ; இனைத்தெனக் கிளக்கு மெண்ணுக் குறிப் பெயர் ஒன்று, பத்து, நூறு என எண்பற்றி எண்ணப்படும் பொருண் மேனின்றன, ஒப்பினாகிய பெயர்நிலையாவன பொன்னன்னது, பொன்னன்னவை என்பன. முன்னையவைபோலப் பல்ல முதலாகிய வழக்கின்கட் பயின்று வாராமையின், வேறு கூறினார். பலசில வென்பன பயின்றவாயினும் , பல்ல, இல்ல, உள்ள என்பனவற்றோடு ஒப்புமையுடையவாகலின், இவற்றொடு கூறினார். (14) |