5.பெயரியல்

அஃறிணைப் பெயர்கள்

அவற்றிற்குக் கள் விகுதி

169கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே
கொள்வழி யுடைய பலவறி சொற்கே1.
 

கள்ளென்னுமீற்றொடு பொருந்தும் அஃறிணையியற் பெயர் சுள்ளீற்றோடு பொருந்துதற்கண் பலவறி சொல்லாம்;

அஃறிணை யியற்பெயராவன ஆ, நாய், குதிரை, கழுதை,தெங்கு , பலா, மலை, கடல் என்னுந் தொடக்கத்துச் சாதிப்பெயர். ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் நிற்றலின் இயற்பெயரென்றார். இவை கள்ளென்னு மீற்றவாய், ஆக்கள், குதிரைகள் என நின்ற வழிப் பன்மை விளக்கலின் பலவறி சொல்லாயினவாறு கண்டுகொள்க.

அஃறிணையியற்பெயரெனவே, பாலறிபெயரேயன்றி அஃறிணைப் பொதுப் பெயரு முளவென்பது பெற்றாம்.

பாற்குரிமை சுட்டாது அஃறிணைக்குரிமை சுட்டிய `அவ்வியற்பெயர்' என்றார்.

(15)

1. `கள்' விகுதி பலவின்பாற்குரியதென்று இந்நூற்பா வரையறுக்கினும், இவ்விகுதி பெற்ற மக்கள் என்னுஞ் சொல் ஆசிரியர் காலத்திலேயே உயர்திணை குறித்தமை.

உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே" என்பதனாலறியப்படும் . மக்கள் என்பது பலர்பால் வினைகொண்டு முடிதலின் தொகுதிப் பெயரன்றிப் பலர் பாற் பெயரே. மக+கள்= மக்கள்; இது மரூஉப் புணர்ச்சி. மகவு என்னும் பெயர் குழந்தையைக் குறித்தலாலும். பகுத்தறிவில்லாத குழந்தை அஃறிணையின் பாற்பட்டதே யாதலாலும், மரபியலில் குரங்குக் குட்டிக்கும் மகவுப் பெயர் கூறப்பட்டிருத்தலாலும் முதலில் அஃறிணை மரபிற் சிறு பிள்ளைகளை குறித்த மக்கள் என்னும் பெயர் பிற்காலத்தில் ஒருவனின் மக்களான பெரியோரையும் ஓர் ஊர்த்தலைவனின் மக்களான பொதுமக்களையும் குறிக்கத் தலைப்பட்டதென்று கொள்ள இடமுண்டு, முது பண்டைக் காலத்தில் ஒவ்வோர் ஊரும் ஒவ்வொரு பெருங் குடும்பமாயிருந்து அவ்வக் குடும்பத் தலைவனாலேயே ஆளப்பட்டு வந்தமை நோக்குக . மக்கள் என்னுஞ் சொல் முதன் முதல் அஃறிணை குறித்தமை கருதியே, `மக்கள் என்னுஞ் சொல்லாற் சுட்டப்படும் உயர்குலம்' என்னும் கருத்தில் மக்கட் சுட்டென்று கூறியிருக்கலாம் தொல்காப்பியர்.