தகுதிபற்றியும் வழக்குப்பற்றியும் நடக்கும் இலக்கணத்திற் பக்கச் சொற் கடியப்படா; எ-று. தகுதி யென்பது அப்பொருட்குரிய சொல்லாற் சொல்லுதன் நீர்மை அன்று என்று அது களைந்து தக்கதோர் வாய்பாட்டால் கூறுதல். அது செத்தாரைத் துஞ்சினாற் என்றலும் சுடுகாட்டை நன்காடு என்றலும் ஓலையைத் திருமுகம் என்றலும், கெட்டதனைப் பெருகிற்று என்றலும் என இத்தொடக்கத்தன. வழக்கு என்பது காரணமின்றி வழங்கற்பாடேபற்றி வருவது. பண்பு கொள் பெயராயினும் பண்பு குறியாது சாதிப்பெயராய் வெள்யாடு வெண்களமர்1 கருங்களமர்2 என வருவனவும், குடத்துள்ளும் பிற கலத்துள்ளும் இருந்த நீரைச் சிறிதென்னாது சில என்றலும், அடுப்பின் கீழ்ப் புடையை3 மீயடுப்பு என்றலும். பிறவும் வழக்காறாம். பொற்கொல்லர் பொன்னைப் பறி என்றலும், வண்ணக்கர் காணத்தை நிலம் என்றலும் முதலாகிய குழுவின் வந்த குறிநிலை வழக்கும், கண் கழீஇ வருதும் கான்மேல் நீர்பெய்து வருதும் என்னுந் தொடக்கத்து இடக்கரடக்கும் தகுதி என்றும், மரூஉ முடிவை வழக்காறு என்றும், உரையாசிரியர் அமைத்தாரால் எனின்; குழுவின் வந்த குறிநிலை வழக்குச் சான்றோர் வழக்கின்கண்ணும் அவர் செய்யுட்கண்ணும் வாராமையின் அமைக்கப்படாவாகலானும், இடக்கரடக்கு, `அவையல் கிளவி' (சொல்-442) எனவும், `மறைக்குங்காலை' (சொல்-443) எனவும் முன்னர் அமைக்கப்படுதலாலும், மரூஉ முடிபு எழுத்ததிகாரத்துக் கூறப்பட்டமையாலும், அவர்க்கது கருத்தன்றென்பது. கருமை முதலாயின ஒருநிகரன அன்மையிற் காக்கையொடு சார்த்திக் களம் பழத்தை விதந்த துணையல்லது காக்கைக்கு வெண்மை நேராமையிற் காக்கையிற்கரிது களம்பழம் என்புழிக் கரிது வெளிதாயிற்றன்று. ஆதலால் வழுவன்று. கிழக்கு மேற்கென்பன வரையறையின்றி ஒன்றனொடு சார்த்திப் பெறப்படுவனவாதலின் ஒன்றற்குக் கீழ்ப்பாலதனைப் பிறிதொன்றற்கு மேல்பாலதென்றலும் வழுவன்று. சிறுவெள்வா யென்பது இடுகுறி. கருவாடு என்பதும் அது. அதனால் இவை வழக்காறு என அமைக்கப்படாவாயினும், உரையாசிரியர் பிறர்மதம் உணர்த்திய கூறினார் என்பது. தத்தமக்குரிய வாய்பாட்டானன்றிப் பிறவாய்பாட்டாற் கூறுதல் வழுவாயினும், அமைக என மரபுவழு அமைத்தவாறு. (17)
1. வெண்களமர் - வேளாளர். 2. கருங்களமர் - புலையர். 3. புடை - பக்க அடுப்பு. |