கள்ளொடு சிவணாத அஃறிணை இயற்பெயர் ஒருமையும் பன்மையும் விளங்கு நிலையுடைய, அதற்கேற்ற வினையொடு தொடர்ந்த வழி ; எ-று. எ - டு:ஆ வந்தது , ஆ வந்தன ; குதிரை வந்தது, குதிரை வந்தன என வினையாற் பால் விளக்கியவாறு கண்டுகொள்க. இஃது அஃறிணைப் பெயரிலக்கணமாயினும் பொதுப்பெயர் வினையொடு வந்தது பால் விளங்குத லொப்புமை நோக்கி ஈண்டு வைத்தாரென்பது. அஃதேல் கள்ளொடு சிவணு மென்பதையும் ஈண்டு வைக்கவெனின் :-இயற்பெயர் முன்ன ராரைக்கிளவி போலக் கள்ளென்பது அஃறிணை யியற்பெயர்க்கு ஈறாய் ஒன்றுபட்டு நிற்றலின், வினையானன்றிப் பெயர்தாமே பன்மை யுணர்த்தியவாம்; அதனால் அதனைப் பாலறிவந்த பெயருணர்த்தும் அதிகாரத்து வைத்தார். (17) |