5.பெயரியல்

5.விரவு பெயர்கள்

திணை தெரியுமாறு

172இருதிணைச் சொற்குமோ ரன்ன உரிமையின்
திரிபுவேறு படூஉம் எல்லாப் பெயரும்
நினையுங் காலைத் தத்தம் மரபின்
வினையோ டல்லது பால்தெரி பிலவே.
 

இருதிணைச் சொல்லாதற்கு மொத்த உரிமையவாதலின் உயர்திணைக்கட் சென்றுழி உயர்திணைப் பெயராயும் அஃறிணைக்கட் சென்றுழி அஃறிணைப் பெயராயும் வேறுபடும் விரவுப் பெயரெல்லாம், ஆராயுங்கால், தத்தம் மரபின் வினையோடியைந் தல்லது, திணைவிளங்க நில்லா ; எ-று.

வினையோடல்லதெனவே, திணைக்கேற்றவாற்றான் ஈறு வேறுபடாது ஓரீற்றவாய் நிற்றலின்,பெயர்தாமே நின்று தத்தமரபினென்ற தனாற் பொதுவினையொடு வந்த திணைவிளக்கா வென்பது பெறப்படும்.

இனி அவை, தத்தம் மரபின் வினையொடு பால் விளக்குமாறு :- சாத்தன் வந்தான், சாத்தன் வந்தது; முடவன் வந்தான், முடவன் வந்தது1 என வந்தவாறு கண்டு கொள்க.

தத்தம் மரபின் வினையாவன உயர்திணைக்கும் அஃறிணைக்கு முரிய பதினோரீற்றுப் படர்க்கைவினை.2

எல்லாப் பெயரு மென்பதனை ஆறு போயினாரெல்லாருங் கூறை கோட்பட்டார் என்பது போலக் கொள்க .

இருதிணைக்கும் பொதுவாகிய சொல், வினையாற் பொதுமை நீங்கி ஒருதிணைச்சொல்லா மென்பது கருத்தாகலின் ஈண்டுப் பாலெனெப்பட்டது திணையேயாம்.

`சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல் ' என்பதனால் தத்தம் மரபின் வினையோடல்லது பால்தெரிபில என்றரேனும் சாத்தனொருவன் சாத்தனொன்று எனத் தம்மரபின் பெயரொடுவந்து பால்விளக்குதலுங் கொள்க.

(18)

1. இருதிணை மருங்கின் , என்ற (கிளவியாக்கம் -10) சூத்திரவுரையிற் காண்க.

2. பழந்தமிழர் ஆவையும் எருதையும் அவற்றின் பயன்பாடும் உழைப்பும் பற்றி அருமையாய்ப் பேணி அவற்றுக்குச் சாத்தி சாத்தன் என்னும் மக்கட் பெயரையே இட்டு அழைத்து வந்திருக்கின்றனர். முடவன் என்பது முட எருதையும் முடத்தி என்பது முட ஆவையுங் குறிக்கும்.