நிகழ்காலம்பற்றி வரும் பலர்வரை கிளலியான் உயர்திணை யொருமைப்பால் தோன்றுதலும் உரித்து அவ்வொருமைப்பால் தோன்றுதற்கேற்ற வினையிடத்து ; எ-று. பலர்வரை கிளவியென்றது செய்யுமென்னு முற்றுச்சொல்லை. எ - டு:சாத்தன் யாழெழுஉம், சாத்தி சாந்தரைக்கும் என்றவழி யாழெழூஉதலுஞ் சாந்தரைத்தலுமாகிய வினை அஃறிணைக்கேலாது ஒருவற்கும் ஒருத்திக்கு மேற்றலின். உயர்திணையொருமைப்பால் விளங்கியவாறு கண்டு கொள்க. நிகழூஉநின்ற தொழிலையுணர்த்துஞ் சொல்லை ஒற்றுமை நயத்தான் நிகழூஉநின்ற பலர்வரைகிளவி யென்றார். நிகழூஉநின்ற வென்றது நிகழாநின்ற வென்றவாறு. நடத்தல் கிடத்தல் முதலாகிய பிறதொழில்பற்றி வரும் பலர்வரை கிளவியான் உயர்திணையொருமை தோன்றாமையின்,`அன்ன மரபின் வினைவயினான' வென்றார். தோன்றலு முரித்தென்னும் எதிர்மறை யும்மையான், அன்ன மரபின் வினைக்கட்டோன்றாமையு முரித்தென்னாது, பலர்வரை கிளவியாற்றோன்றாமையு முரித்தென்று கொள்க. அஃதேல், யாழெழூஉதலுஞ் சாந்தரைத்தலு முதலாகிய தொழில் வேறுபாடுபற்றி வரும் முன்னிலைவினையானும் வியங்கோளானும் இருவகை யெச்சத்தானு மெல்லாம் உயர் திணைப்பால் தோன்றுதலால் பலர்வரை கிளவியினென வரைந்து கூறல் பொருந்தாதெனின்:- அற்றன்று; ` முன்னஞ் சேர்த்தி முறையின் உணர்தல் ' (சொல் -193) என முன்னிலைப் பெயராற் பாலுணருமாறு முன்னருணர்த்தப்படுதலானும், அன்னமரபின் வினைபற்றி வரும் வியங்கோள் ஏவற் பொருண்மைத்தாகலின் ஏயதுணர்ந்து செய்யு முயர்திணை சுட்டியல்லது பெரும் பான்மையும் வாராமையான் ஆண்டன்ன மரபின் வினையாற் பாலுணர்தல் ஒரு தலையன்றாகலானும் பெயரெச்சத்திற்கு முடிவாகிய பெயரும் வினையெச்சமும் சிறுபான்மை பொதுவினை கொண்டவழியல்லது தத்தமரபின் வினை கொண்டவழி அவ்வினையே பால் விளக்கலான் ஆண்டெச்சம் பால் விளக்கல் வேண்டாமையானும், அவை யொழித்துப் பலர்வரை கிளவியே விதந்து கூறினார். இருவகை யெச்சத்தானும் வியங்கோளானுஞ் சிறுபான்மை உயர்திணைப்பால் தோன்றல் ஒன்றென முடித்தலென்பதனாற் கொள்க. நிகழ்காலத்துப் பிறசொல்லை நீக்குதற்குப் ` பலர்வரை கிளவி ' யென்றார். பன்மைவிரவுப்பெயரை நீக்குதற்கு ` நிகழூஉநின்ற ' வென்றார். மேல் விரவுப்பெயர் தத்தமரபின் வினையோடல்லது பால் தெரிபில வென்றார் ; இனி அவற்றானன்றிப் பொதுவினை யானும் பால்தெரிய நிற்குமென்பது உணர்த்தியவாறு. அஃதேல் , சாத்தன் புற்றின்னும், சாத்தி கன்றீனும் எனச் செய்யுமென்னுஞ் சொல்லான் அஃறிணைப்பாலுந் தோன்றுதலின், அது கூறாராயிற் றென்னையெனின் :- எழுதலும் அரைத்தலும் அஃறிணைக்கென்னும் இயைபில்லாதவாறு போலப் புற்றின்றல் உயர்திணைக்கு எவ்வாற்றானு மியைபின்றெனப் படாமையானும், கன்றீனும் என்புழி ஈனு மென்னும் வினையானன்றிக் கன்றென்னுஞ் சார்பான் அஃறிணைப்பால் தோன்றுதலானும், ஒருமை வினையான் ஒரு வழி அஃறிணைப்பால் தோன்றினும் அது சிறுபான்மை யாகலானும், கூறாராயினா ரென்பது. (19) |