விரவுப்பெயர் பால்தெரிய நிற்குமா றுணர்த்தி, இனி அவை தம்மையுணர்த்துவா னெடுத்துக் கொண்டார். இயற்பெயர் முதலாக நீயென்ப தீறாக எடுத்துச் சொல்லப்பட்டனவல்லாத அன்னபிறவும் ஆண்டு வருமாயிற் சொல்லப்பட்டவற்றொடுங் கூட்டுக : எ-று. இயற்பெயராவன சாத்தன் கொற்றன் என வழங்குதற் பயத்தவாய் நிமித்தமின்றிப் பொருளேபற்றிவரும் இடுபெயர். இயற்பெயரெனினும் விரவுப் பெயரெனினு மொக்குமாயின் அவற்றுள் ஒருசாரனவற்றிற்கு அப்பெயர் கொடுத்த தென்னையெனின்:- அவற்றது சிறப்பு நோக்கி அப்பெயர் கொடுத்தார் ; பாணியுந் தாளமும் ஒரு பொருளவாயினும் இசை நூலார் தாளத்துள் ஒருசாரனவற்றிற்குப் பாணி யென்னும் பெயர் கொடுத்தாற் போல வென்பது. சினைப்பெயராவன பெருங்காலன் , முடவன் என அச் சினையுடைமையாகிய நிமித்தம்பற்றி முதன்மேல் வரும் பெயர். சினைமுதற் பெயராவன சீத்தலைச்சாத்தன். கொடும்புறமருதி என்ச் சினைப்பெயரோடு தொடர்ந்து வரும் முதற்பெயர் - சாத்தன், மருதியென்னு முதற்பெயர் சினைப்பெயரொடு தொடர்ந்தல்லது பொருளுணர்த் தாமையிற் சினை முதற் பெயராயின. முறைப்பெயராவன தந்தை தாயென முறைபற்றி முறையுடைப் பொருண்மேல் வருவன. முறையாவது பிறவியான் ஒருவனோடொருவதற்கு வருமியைபு. அல்லன வைந்துந் தம்மையுணர்த்தி நின்றவாகலான் , தாமென்பது முதலாகிய சொல்லேயாம். பிறவுமென்றதனான், மக, குழவி போல்வன கொள்க. இவற்றை உயர்திணைப் பெயரென்றாரால் உரையாசிரிய ரெனின் - மரபியலுள். ` மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் அவையும் அன்ன அப்பா லான ' (மரபிய - 14) எனவும், ` குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை ' (மரபியல் -19) எனவும், அவை அஃறிணைக்காதல் கூறி,` குழவியும் மகவும் ஆயிரண் டல்லவை கிழவ அல்ல மக்கட் கண்ணே ' (மரபியல் - 23) என வுயர்திணைக்கு மோதிவைத்தாராகலின், அவை விரவுப்பெயரேயாம்; அதனான் அது போலியுரை யென்க. ஒரு நிமித்தத்தான் இரண்டுதிணைப் பொருளுமுணர்த்துதலின் விரவுப் பெயர் பொருடோறு நிமித்தவேறுபாடுடைய பலபொருளொரு சொலன்மை யறிக. (20) |