மேற்கூறிய விரவுப்பெயருள் இயற்பெயருஞ் சினைப்பெயருஞ் சினைமுதற்பெயரும் ஓரொன்று நந்நான்காம் ; முறைப்பெயர் இரண்டாம்; ஒழிந்தன ஐந்து பெயருந் தத்தமிலக்கணத்தனவாம் : எ-று. தத்தமிலக்கணத்தன வென்றது பொதுவிலக்கணத்தன வல்ல சிறப்புலக்கணத்தனவேயா மென்றவாறு. எனவே, அவை ஓரொன்றாகி நிற்குமென்றவாறாம், ஈண்டுத் தத்தமென்பது, அந்நிகரன வெனப் பொதுமை சுட்டாது, ஓரொன்றாய் நின்ற பெயரைச் சுட்டி நின்றது. தனிப்பெயரைந்தும் விரிப்பெயர் பதினான்குமாகப் பத்தொன்பதென்றவாறாம். கூறப்பட்ட பெயரது பாகுபாடாகிய ஒருபொருணுதலுதல்பற்றி ஒரு சூத்திரமாயிற்று. நான்காய் விரிதலும் இரண்டாய் விரிதலுந் தாமே யாதலுமாகிய பொருள் வேற்று மையான் மூன்று சூத்திரமெனினுமமையும். (21) |