இயற்பெயர் முதலிய நான்கன் விரியாகிய பதினான்கும் இவையென வுணர்த்தியவாறு. இவற்றிற்கு உதாரணம் முன்னர்க் காட்டுதும் இயற்பெயர் முதன்மூன்றும் ஓரொன்று நான்காய் விரிதலும், முறைப்பெயர் இரண்டாதலும், மேலைச் சூத்திரத்தாற் பெறப்பட்டமையான் அந் நான்கும் இரண்டுமாவன இவையென்பது இச் சூத்திரங்கட்குக் கருத்தாகக் கொள்க. இவ்வா றிடர்ப்படாது தொகைச் சொற்களைப் பயனிலை யாகக் கொள்ளவே, இச் சூத்திரங்களான இவையின்னவென்றலும் இத்துணைய வென்றலும் பெறப்படுமாகலின், மேலைச் சூத்திரம் வேண்டாவெனின்:-அற்றன்று; இவற்றான் விரவுப் பெயர் பத்தொன்பதென்னும் வரையறை பெறப்படாமையானும், வகுத்துக் கூறல் தந்திரவுத்தியாகலானும் அது வேண்டுமென்பது. (22-25) |