1.கிளவியாக்கம்

2.பால்

இயல்புவழக்கும் தகுதிவழக்கும் அமையும் வகை.

18இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை
வழக்கா றல்ல செய்யு ளாறே.
 

இனப் பொருளைச் சுட்டுதலின்றிப் பண்படுத்து வழங்கப்படும் பெயர் வழக்குநெறி யல்ல செய்யுள்நெறி; எ-று.

எ - டு: `செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும், வெண்திங்களுள் வெயில் வேண்டினும்' (புறம் 38) என வரும்.

பல பொருட்குப் பொதுவாகிய சொல்லன்றே ஒரு பொருட்குச் சிறந்த பண்பான் விசேடிக்கப்படுவது ; ஞாயிறு திங்கள் என்பன பொதுச்சொல் அன்மையிற் செஞ்ஞாயிறு என்றும் வெண்திங்கள் என்றும் விசேடிக்கப்படாவாயினும், செய்யுட்கண் அணியாய் நிற்றலின், அமைக்க என்றார்.

பெருங்கொற்றன் பெருஞ்சாத்தன் என இல்குணம்1 அடுத்து வழக்கின் கண்ணும் இனஞ்சுட்டாது வருதலின் செய்யுளாறென்றல் நிரம்பாதெனின்- அவை இனஞ்சுட்டாமையின் வழுவாயின அல்ல. இல்குணம் அடுத்தலின் வழுவாயின. இனஞ்சுட்டலாவது இனத்தைச் சுட்டி அவற்றினின்றும் விசேடிக்கப்படுதல்,வெண்மை முதலாயின விசேடித்தலாவது அக் குணமில்லா இனப் பொருளின் நீக்கி அக் குணமுடையதனை வரைந்து சுட்டுவித்தலன்றே ; சுட்டப் படுவதன் கண் அக்குணமில்லையாயின் வரைந்து சுட்டுவிக்குமாறு என்னை : அதனால் விசேடிக்கற்பாலது விசேடியாது நின்றதன்றாகலின் ஈண்டைக்கு எய்தா; `வழக்கின் ஆகிய உயர்சொற் கிளவி' (சொல்-27) என்புழி ஒன்றென முடித்தல் என்பதனால் அமைக்கப்படும்.

குறுஞ்சூலி, குறுந்தடி என்னுந் தொடக்கத்தன சூலி தடியெனப் பிரிந்து நில்லாமையிற் பண்புகொள் பெயர் எனப் படா,பண்படாது,வடவேங்கடந் தென்குமரி, முட்டாழை,கோட்சுறா எனத்திசையும் உறுப்புந் தொழிலும் முதலாய அடையடுத்து இனஞ்சுட்டாது வருவன ஒன்றென முடித்தல் என்பதனால் செய்யுளாறென அமைத்துக் கொள்ளப்படும்.

ஒன்றன தாற்றலான் ஒன்று பெறப்படுதலின்,2 வழக்காறல்ல என்றானுஞ் செய்யுளாறென்றானும் கூற அமையுமெனின் - உணர்த்துவது சொல்லில் வழி என மறுக்க.

பண்புகொள் பெயர் இனங்குறித்து வருதல் மரபு; அம் மரபு வழக்கின்கண் வழுவற்க என்றும், செய்யுட்கண் வழுவமைக்க என்றுங் காத்தவாறாயிற்று.

(18)

1. இல் குணம் -இல்லாத குணம்.

2. ஒன்றன தாற்றலான் ஒன்று பெறப் படுதல் - வழக்காறல்ல என்பதால் செய்யுளா றென்பதும், செய்யுளாறென்பதால் வழக்காறல்ல வென்பதும் அறியப்படுதல்.