5.பெயரியல்

விரவு பெயர்கள்

ஆண்மை சுட்டிய பெயர்

181ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே.
 

ஆண்மைபற்றி வரும் நான்கு பெயரும், அஃறிணையா ணொன்றற்கும், உயர்திணை யொருவனுக்கும் உரிய ; எ-று.

அந் நான்குமாவன: ஆண்மை யியற்பெயரும், ஆண்மைச்சினைப் பெயரும், ஆண்மைச் சினைமுதற்பெயரும், ஆண்மை முறைப்பெயருமேயாம்.

எ - டு:சாத்தான் வந்தது, சாத்தன் வந்தான் எனவும்; முடவன் வந்தது, முடவன் வந்தான் எனவும்; முடக்கொற்றன் வந்தது,முடக்கொற்றன் வந்தான் எனவும்; தந்தை வந்தது, தந்தை வந்தான் எனவும் அவை முறையானே அஃறிணையா ணொன்றற்கும், உயர்திணையாண் பாற்கும் உரியவாய் வந்தவாறு கண்டுகொள்க. பிறவுமன்ன.

(27)