5.பெயரியல்

விரவு பெயர்கள்

பன்மை சுட்டிய பெயர்

182பன்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றே பலவே யொருவ ரென்னும்
என்றிப் பாற்கும் ஓரன் னவ்வே.
 

பன்மை சுட்டி வரும் மூன்று பெயரும், அஃறிணை யொருமையும் அத்திணைப் பன்மையும் உயர்திணை யொருமையுமெனச் சொல்லப்பட்ட மூன்று பாற்கும் உரிய ; எ-று.

அம்மூன்றுமாவன; பன்மையியற்பெயரும், பன்மைச் சினைப்பெயரும், பன்மைச்சினை முதற்பெயருமாம்.

எ - டு:யானை வந்தது. யானை வந்தன, யானை வந்தான், யானை வந்தாள் எனவும்; நெடுங்கழுத்தல் வந்தது,நெடுங்கழுத்தல் வந்தன,நெடுங்கழுத்தல் வந்தான், நெடுங்கழுத்தல் வந்தாள் எனவும்; பெருங்கால் யானை வந்தது, பெருங்கால் யானை வந்தன,பெருங்கால் யானை வந்தான், பெருங்கால் யானை வந்தாள் எனவும் அவை முறையானே அஃறிணையொருமைக்கும், அத்திணைப் பன்மைக்கும், உயர் திணையொருமைக்கும் உரியவாய் வந்தவாறு கண்டுகொள்க.

பன்மைக்கேயன்றி ஒருமைக்குமுரியவாய் வருவனவற்றைப் பன்மைப் பெயரென்ற தென்னையெனின்:- நன்று சொன்னாய்; பெண்மைப் பெயர் முதலாயினவும் பிறபெயராலுணர்த்தப்படாத பெண்மை முதலாயினவற்றையு முணர்த்தலானன்றே அப் பெயரவாயின. என்னை ? பெண்மை முதலாயின பிறபெயராலுணர்த்தப்படுமாயின் அப்பெண்மை முதலாயினவற்றான் அப்பெயர் வரைந்து சுட்டலாகாமையின், பன்மைப்பெயர் ஒருமை யுணர்த்துமாயினும், பிறவாற்றாலுணர்த்தப்படாத பன்மையை ஒருகாலுணர்த்தலின் அப் பன்மையான் அவை வரைந்து சுட்டப்படுதலின் அப்பெயரவாயின. அற்றேனும், பன்மை சுட்டிய பெயரென்றமையாற் பன்மையே யுணர்த்தல் வேண்டுமெனின்:- அற்றன்று; இயை பின்மை நீக்கலும் பிறிதினியைபு நீக்கலுமென விசேடித்தல் இருவகைத்து. வெண்குடைப் பெருவிறல் என்ற வழிச் செங்குடை முதலியவற்றோடு இயைபு நீக்காது வெண்குடையோடு இயைபின்மை மாத்திரை நீக்கி வெண்குடையாயென்பதுபட நிற்றலின் அஃதியைபின்மை நீக்கலாம். கருங்குவளை என்ற வழிச்செம்மை முதலாயினவற்றோடு இயைபு நீக்கலின், இது பிறிதினியைபு நீக்கலாம். பன்மை சுட்டிய பெயரென்பது, வெண்குடைப் பெருவிறல் என்பதுபோல, ஒருமையியைபு நீக்காது பன்மை சுட்டுதலோடு இயைபின்மை மாத்திரை நீக்கிப் பன்மை சுட்டுமென்பதுபட நின்றது. அதனான் விசேடிக்குங்காற் பிறிதினியைபு நீக்கல் ஒருதலையன்றென்க.அஃறிணையொருமையும் அத்திணைப்பன்மையும் உயர்திணை யொருமையுமாகிய பலவற்றையும் உணர்த்தலாற் பன்மை சுட்டிய பெயரென்பாருமுளர். அஃதுரை யாசிரியர் கருத்தன்மை அவ்வுரையான் விளங்கும்.1

என்றிப்பாற்கு மென்னுமுன்மை, இம் மூன்று பாற்குமென்பது பட நிற்றலின், முற்றும்மை.

(28)


1. பன்மை சுட்டிய பெயரென்பது இயைபின்மை மாத்திரை நீக்கிய விசேடணமடுத்து நின்றதெனச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் உரைத்ததனை மறுத்துப் பிறிதினியைபு நீக்கிய விசேடணமடுத்து நின்றதென நாட்டினார் நன்னூல் விருத்திகாரர்; பெயரியலில் ` ஒன்றே இருதிணைத் தன்பா லேற்கும்' என்னுஞ் சூத்திர வரையிற் காண்க.