ஒருமை சுட்டிவரும் மூன்று பெயரும், அஃறிணை யொருமைக்கும், உயர்திணை யொருமைக்கும் உரிய ; எ-று. அம் மூன்றுமாவன: ஒருமையியற்பெயரும், ஒருமைச் சினைப்பெயரும், ஒருமைச் சினைமுதற்பெயருமாம். எ - டு: கோதை வந்தது,கோதை வந்தான்,கோதை வந்தாள் எனவும்; செவியிலி வந்தது,செவியிலி வந்தான்,செவியிலி வந்தாள் எனவும்; கொடும்புறமருதி வந்தது,கொடும்புறமருதி வந்தான்,கொடும்புறமருதி வந்தாள் எனவும் அவை முறையானே அஃறிணையொருமைக்கும், உயர்திணையொருமைக்கும் வந்தவாறு கண்டுகொள்க. பெண்மைப் பெயரும் ஆண்மைப் பெயரும் ஒருமை யுணர்த்துமாயினும், இவை பெண்மை ஆண்மை, யென்னும் வேறுபாடுணர்த்தாது ஒருமையுணர்த்தலான், இவற்றை ஒருமைப் பெயரென்றார். (29) |