5.பெயரியல்

விரவு பெயர்கள்

எல்லாம் என்னும் பெயர்

186எல்லாம் என்னும் பெயர்நிலைக் கிளவி
பல்வழி நுதலிய நிலைத்தா கும்மே.
 

எல்லாமென்னும் பெயர் இரண்டு திணைக்கண்ணும் பன்மை குறித்து வரும் ; எ-று.

வழியென்றது இடம். பொருள் சொன்னிகழ்தற் கிடமாகலிற் பல் பொருளைப் `பல்வழி' என்றார்.

எல்லாம் வந்தேம், எல்லாம் வந்தீர், எல்லாம் வந்தார், எல்லாம் வந்தன என வரும்.

எல்லாமென்னும் பெயர் இரண்டுதிணைக்கண்ணும் பன்மை குறித்து வருமென்னாது பல்வழியென்றது. மேனியெல்லாம் பசலையாயிற்று என ஒரு பொருளின் பலவிடங் குறித்து நிற்றலுமுடைத்தென்பதூஉம் கோடற்குப் போலும். அஃது எஞ்சாப்பொருட்டாய் வருவதோ ருரிச்சொலென் பாருமுளர்.

(32)