எல்லாமென்னுஞ் சொல், உயர்திணைக் காங்கால், தன்மைப்பன்மைக்கல்லது முன்னிலைப் பன்மைக்கும் படர்க்கைப் பன்மைக்கும் ஆகாது ; எ-று. `நெறிதா ழிருங்கூந்த னின்பெண்டி ரெல்லாம்' (கவி-97) எனப் படர்க்கைக் கண்ணும் வந்ததாலெனின்:- எழுத்ததிகாரத்துள், `உயர்திணையாயி னம்மிடை வருமே' (எழு-190) எனத் தன்மைக்கேற்ற சாரியை கூறினமையானும்,ஈண்டு நியமித்தலானும், அஃதிட வழுவமைதியா மென்பது. தன்மைச்சொல் அஃறிணைக்கின்மையின், எல்லாமென்பது பொதுமையிற் பிரிந்து தன்னுளுறுத்த பன்மைக்கண் வந்துழி உயர்திணையீற்றுப் பெயரெனப்படினும், இரு திணைப்பன்மையு முணர்த்துதற்கேற்றுப் பொதுப் பிரியாது நின்றவழி விரவுப் பெயராதற் கிழுக்கின்மை யறிக. எல்லாப்பார்ப்பாரும், எல்லாச் சான்றாரும் எனப் படர்க்கைக்கண் வருதலும் கோடற்குத் தன்னுள்ளுறுத்த பன்மைக் காங்கால் உயர்திணை மருங்கினல்லதாகாதென மொழிமாற்றி யுரைத்தாரால் உரையாசிரியரெனின்:-படர்க்கைக்கண் வருதல் இடவழுவமைதி யென்றவழிப்படு மிழுக்கின்மையானும், `தன்மைச் சொல்லே யஃறிணைக் கிளவி' (சொல்-43) எனவும்; `யான் யாம் நாமென வரூஉம் பெயர்' (சொல்-163) எனவும் பிறாண்டு மோதியவாற்றால், தன்மைச்சொல் அஃறிணைக்கின்மை பெறப்படுதலின் ஈண்டுக்கூறல் வேண்டாமை யானும், எழுத்ததிகாரத்துள் `உயர் திணையாயி னம்மிடை வருமே' எனத் தன்மைக்குரிய சாரியையே கூறலானும், அது போலியுரையென்க. ஈண்டு ஆக்கம் பெருக்கம் பெருக்கமில்லையெனவே, சிறுபான்மை ஏனையிடத்திற்கு முரித்தா மென்பாருமுளர். (33) |