தன்னியல்பில் திரியாது நின்ற பொருளை, அதனியல்பு கூறுங்கால் ஆக்கமும் காரணமும் கொடாது இற்றெனச் சொல்லுக; எ-று. இயல்பாவது பொருட்குப் பின் தோன்றாது உடன் நிகழுந் தன்மை. எ - டு: நிலம் வலிது, நீர் தண்ணிது , தீ வெய்து, வளி உளரும் , உயிர் உணரும் என வரும். இற்றென்பது வினைக்குறிப்பு வாய்பாடாயினும், உளரும், உணரும் என்னுந் தெரிநிலை வினையும், இற்றென்னும் பொருட்பட நிற்றலின், இற்றெனக் கிளத்தலேயாம். நிலம் வலிதாயிற்று என இயற்கைப் பொருள் ஆக்கம் பெற்று வருமால் எனின்:- கல்லும் இட்டிகையும் பெய்து குற்றுச் செய்யப்பட்ட நிலத்தை வலிதாயிற் றெனின் , அது செயற்கைப் பொருளேயாம். நீர்நிலமும் சேற்று நிலமும் முன் மிதித்துச் சென்று வன்னிலம் மிதித்தான், நிலம் வலிதாயிற்று என்ற வழி மெலிதாயது வலிதாய் வேறுபட்டதென ஆக்கம் வேறுபாடு குறித்து நிற்றலின் இயற்கைப் பொருள் ஆக்கமொடு வந்ததன்றாம். அல்லது நிலத்திற்கு வன்மை விகாரமென்று ஓர்ந்து நிலம் வலிதாயிற்று என்னுமாயின் திங்கள் கரிது என்பது போலப் பிறழ உணர்ந்தார் வழக்காய் ஆராயப்படா தென்க. (19) |