5.பெயரியல்

விரவு பெயர்கள்

நீயிர் என்னுஞ் சொல்

190ஏனைக் கிளவி பன்மைக் குரித்தே.
 

நீயிரென்னும் பெயர் பன்மைக்குரித்து ; எ-று.

பன்மையாவது பல்லோர்க்கும் பலவற்றிற்கும் பொது வாகிய பன்மை.

எ - டு:நீயிர் வந்தீர் என வந்தவாறு கண்டு கொள்க.

`எல்லாம் நீயிர் நீ'(சொல்-174) எனவோதியவாறன்றி, ஒருமை பன்மையென்னும் முறைபற்றி ஈண்டு நீ யென்பதனை முற்கூறினார். அன்றி, முந்துமொழிந்ததன் றலைதடுமாற்ற மென்னுந் தந்திரவுத்தி யெனினுமமையும்.

நீயிர் நீயென இருதிணையைம்பாலுள் ஒன்றனை வரைந்துணர்த்தா வாயினும், ஒருமை பன்மையென்னும் பொருள் வேறுபாடுடையவென வரையறைப்படுவழி, வரையறுத்தவாறு.

(36)