5.பெயரியல்

விரவு பெயர்கள்

ஒருவர் என்னுஞ் சொல்

191ஒருவ ரென்னும் பெயர்நிலைக் கிளவி
இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை.
 

மேல் இன்றிவரென்னு மெண்ணியற் பெயரென்றோதப்பட்டவற்றுள், ஒருவரென்னும் பெயர்ச்சொல், உயர்திணை முப்பாலுள் ஒருபால் விளக்காது, ஒருவன் ஒருத்தி யென்னும் இருபாற்கும் பொதுவாய் நிற்கும் ; எ-று.

எ - டு:ஒருவர் வந்தார் எனப் பொதுவாய் நின்றவாறு கண்டு கொள்க.

இருபாற்குமெனப் பொதுப்படக் கூறினாரேனும், ஒருவரென்னும் ஒருமைப்பெயரா னுணர்த்தப் படுதற்கேற்பன ஒருவன் ஒருத்தியென்பனவே யாகலான், அவையே கொள்ளப்படும்.

உயர்திணை யொருமைப்பால் இரண்டென் றறியப்பட்ட மையான், இருபாற்கு முரித்தென்னு மும்மைமுற்றும்மை. உயர்திணைப் பெயராயினும், பாலுணர்த்தாமையும் முன்னர்த்தானுணர்த்தலும் இதற்கு மொக்குமாகலின், ஈண்டுக் கூறினாரென்பது.

(37)