இனியொருசா ருயர்திணைப் பெயர்க்கும் விரவுப்பெயர்க்கும் எஞ்சிநின்ற இலக்கணங் கூறுகின்றார். மகடூஉப் பொருண்மைக்கண் பால்திரிந்துவரும் பெண்மகனென்னும் பெயர், வினைகொள்ளுமிடத்து மகடூஉவிற்குரிய வினை கொள்ளும் ; எ-று. எ - டு:பெண்மகன் 1 வந்தான் என வரும். பொருண்மை பற்றி மகடூஉ வினைகொள்ளுமோ ஈறு பற்றி ஆடூஉ வினைகொள்ளுமோ என்று ஐயுற்றார்க்கு ஐயமகற்றியவாறு. `சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல்' என்பதனால் தொழில்வயினான வென்றாராகலின், சிறப்பில்லாப் பெயர்வயினானும் பெண்மகனிவள் என மகடூஉ வியற்கையாமென்பதாம். (40)
1. பெண்மகன் என்னும் வழக்குப்போன்றதே வடார்க்காட்டு வட்டத்தில் இன்று வழங்கும் பெட்டைப்பசன்கள் என்பதும். இவற்றுள் முன்னது ஒருமை, பின்னது பன்மை. இதுவே இவற்றிடை வேறுபாடு; பையன் - பயன் - பசன். பெண்மகள் என்பதையும் பெட்டைப்பசன்கள் என்பதைப் போன்று கொடுந்தமிழ் வழக்காகக் கொள்வதே பொருந்தும். |