இறப்பும் நிகழ்வும் ,எதிர்வும் என்று சொல்லப்படும், அம்மூன்று காலமுங் குறிப்புவினையொடும் பொருந்தும் மெய்ந்நிலைமையையுடைய, வினைச்சொல்லானவை தோன்று நெறிக்கண் ; எ-று. எனவே, காலமூன்றாவன இறப்பும், நிகழ்வும், எதிர்வு மென்பதூஉம், வெளிப்படக் காலம் விளக்காதன குறிப்பு வினையென்பதூஉம் பெற்றாம். எ - டு:உண்டான், உண்ணாநின்றான் , உண்பான் என வரும். இறப்பாவது தொழிலது கழிவு, நிகழ்வாவது தொழில் தொடங்கப்பட்டு முற்றுப்பெறாத நிலைமை. எதிர்வாவது தொழில் பிறவாமை. தொழிலாவது பொருளினது புடைபெயர்ச்சியாதலின் அஃதொருகண நிற்பதல்லது இரண்டு கண நில்லாமையின், நிகழ்ச்சியென்பதொன்று அதற்கில்லையாயினும், உண்டல் தின்றலெனப் பஃறொழிற்றொகுதியை ஒரு தொழிலாகக் கோடலின், உண்ணாநின்றான், வாராநின்றான் என நிகழ்ச்சியுமுடைத்தாயிற்றென்பது. வினைக்குறிப்புக் காலமொடு தோன்றுங்கால், பண்டு கரியன் இது பொழுது கரியன் என இறந்தகாலமும் நிகழ்காலமும் முறையானே பற்றி வருதலும், நாளைக்கரியனாம் என எதிர்காலத்து ஆக்கமொடு வருதலும் அறிக. மெய்ந்நிலையுடைய வென்றது விளங்கித் தோன்றாவாயினும் காலம் வினைக்குறிப்பொடு மெய்மையென வலியுறுத்தவாறு. (3) |